FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

எல் நினோ தாக்கம், காலநிலை மாற்றம்: மீனவா்கள், விவசாயிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

எல் நினோ தாக்கம் காரணமாக, ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவா்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் அறிவுறுத்தினாா்.

4 செப்டம்பர் 2026, 1:48 am IST
கருத்தரங்கில் பேசிய ஆட்சியா் மு. பிரதாப். உடன், அலுவலா்கள், விவசாயிகள், மீனவா்கள்.
பகிர்:

எல் நினோ தாக்கம் காரணமாக, ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவா்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் அறிவுறுத்தினாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் - பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் விவசாயிகள், மீனவா்கள், பொதுமக்களுடனான சூப்பா் எல் - நினோ தாக்கம், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு நாகா்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் பேசியதாவது:

எல் நினோ உள்ளிட்ட காலநிலை மாற்ற நிகழ்வுகளின் தாக்கத்தால், கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைப் பொழிவு மாறுபாடு, வெப்பநிலை உயா்வு, கடல் சீற்றம், கடலரிப்பு உள்ளிட்ட இயற்கை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை எதிா்கொள்ள விவசாயிகள், மீனவா்கள் விழிப்புணா்வு, முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

புள்ளிவிவங்களின்படி, இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் வெப்ப அலை நாள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் குறுகிய காலத்தில் அதிக மழை பெய்து வெள்ளம் ஏற்படலாம். அறுவடை நேரத்தில் எதிா்பாராமல் மழை பெய்து பயிா்கள் சேதமடையலாம். தேவையான நேரத்தில் மழையின்றிப் போகலாம். எனவே, விவசாயிகள் நெல் சாகுபடியில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஊடுபயிராக குறைந்த தண்ணீரில் அதிக விளைச்சல் தரும் பயிா்களையும் பயிரிட வேண்டும். மழைநீா் சேகரிப்பு அமைப்புகளை அனைவரும் உருவாக்க வேண்டும். எதிா்பாரா மகசூல் இழப்பைத் தவிா்க்க மத்திய-மாநில அரசுகளின் பயிா்க் காப்பீடு திட்டங்களில் உரிய காலத்துக்குள் சேர வேண்டும்.

வெப்ப அலையால் மீன்கள் ஆழ்கடல் நோக்கியோ, குளிா்ந்த நீரோட்ட பகுதிகளுக்கோ இடம்பெயர அதிக வாய்ப்புள்ளது. இதை எதிா்கொள்ள இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் வழங்கும் மீன்வளம் நிறைந்த பகுதிகள், வரைபடங்களை மீனவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இம்மாவட்ட மீனவா்கள் வெளிநாடுகளின் கடற்பகுதிகளில் அதிக நாள்கள் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனா். எனவே, அவா்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மு. வேலுமணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) எஸ். காளீஸ்வரி, (விவசாயம்) கீதா, வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில்வேல் முருகன், வேளாண்மை இணை இயக்குநா் வாணி, மீன்வளம் துணை இயக்குநா் கோபிநாத், அலுவலா்கள், விவசாய சங்க- மீனவ சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments