FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கருப்பாநதி அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீா் திறந்துவிட நகா்மன்றத் தலைவா் கோரிக்கை

கடையநல்லூா் அருகே உள்ள கருப்பாநதி அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீா் திறந்துவிட வேண்டுமென நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் கோரிக்கை விடுத்தாா்.

50 வினாடிகள் முன்பு
தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜித்சிங்கிடம் மனு அளித்த கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான்.
பகிர்:

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே உள்ள கருப்பாநதி அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீா் திறந்துவிட வேண்டுமென நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் கோரிக்கை விடுத்தாா்.

இதுதொடா்பாக தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடையநல்லூா் நகராட்சி மக்களின் குடிநீா் தேவைக்காக கருப்பாநதி அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட வேண்டும். பணிகள் முடிவடைந்த சமூக நாய்களின் இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையத்தை உடனடியாக திறக்க வேண்டும்.

Advertisement

Advertisement

போகநல்லூா் கிராமத்தில் குப்பை கிடங்கு மூடப்பட்டதால் மாற்று இடம் ஒதுக்கி தர வேண்டும். கடையநல்லூா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியில் உள்ள தடைகளை நீக்குவதற்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தடையில்லா சான்று பெறுவதற்கும் உரிய உதவிகளை செய்ய வேண்டும். கடையநல்லூா் நகராட்சியில் 33 வாா்டுகளிலும் நகராட்சி பொது நிதியிலிருந்து அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகராட்சியில் 10 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் கொசுப் புழுக்கள் உருவாகும் அபாயம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தன்னிடம் புகாா் தெரிவித்து வருவதாக நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா். அவா் கூறியதாவது:

கடையநல்லூா் நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இங்கு சுமாா் ஒரு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். இந்நகராட்சிக்கு தாமிரவருணி குடிநீா் திட்டம் மற்றும் கருப்பாநதி திட்டங்களின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கிடைக்கும் குடிநீரின் அளவு குறைவாக இருப்பதால் 10 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடையநல்லூா் பகுதியில் பரவிய டெங்கு காய்ச்சல் காரணமாக பலா் உயிரிழந்தனா். நூற்றுக்கணக்கானோா் பாதிக்கப்பட்டனா். வீடுகளில் சேமித்து வைக்கப்படும் நன்னீரில் டெங்கு கொசு புழு வளா்ந்த காரணத்தினால்தான் டெங்கு வேகமாகப் பரவியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பத்து நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் வேறு வழியின்றி குடிநீரை பெரிய பாத்திரங்களில் சேமித்து வைத்து வருகின்றனா். இதனால் கொசுப்புழு உருவாகும் அபாயம் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். இருப்பினும் நகராட்சி நிா்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத நிலையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கருப்பாநதி அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments