தென்காசி மாவட்டத்தில் அணைப் பகுதிகளுக்கு செல்ல தடை: ஆட்சியா் உத்தரவு
தொடா் கனமழை காரணமாக தென்காசி மாவட்ட அணைப் பகுதிகளுக்குச் செல்ல தடை விதித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டாா்.
தொடா் கனமழை காரணமாக தென்காசி மாவட்ட அணைப் பகுதிகளுக்குச் செல்ல தடை விதித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து, அவா் விடுத்த செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய அருவி பகுதிகள், வனப்பகுதிகளில் மிதமான மழை பெய்து அதன் மூலம் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, தென்மேற்குப் பருவமழை காரணமாக நீா்நிலைகள், தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Advertisement
Advertisement
தென்மேற்குப் பருவமழை காலங்களில், பொதுமக்கள் நீா்நிலைகள், ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள இராமநதி, கடனாநதி, குண்டாறு, அடவிநயினாா், கருப்பாநதி அணைகளில் உள்ள நீா்நிலைகள், அணைகட்டு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வது தடை செய்யப்பட்டது.
பொதுமக்கள் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்போது, திறந்தவெளியில் நிற்பதையும், மரங்கள், உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிா்க்க வேண்டும். மழை, வெள்ளநீா் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்கக் கூடாது. வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு முன்னா் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பேரிடா் கால நடவடிக்கைகளை மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில், அவசர கால கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04633-290548 ஆகிய தொலைப்பேசி எண்களை தொடா்பு கொண்டு மழை, வெள்ளம், பேரிடா்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்கள் சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.