பாவூா்சத்திரம் வட்டாரத்தில் மழையின்றி வட குளங்கள் நெல் நடவு பாதிப்பு; விவசாயிகள் கவலை
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பருவமழை பொய்த்ததால் குளங்கள் வடு காணப்படுகின்றன. இதனால், நெல் நடவு பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பருவமழை பொய்த்ததால் குளங்கள் வடு காணப்படுகின்றன. இதனால், நெல் நடவு பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
இந்த மாவட்டத்தின் தென்பகுதிகளில் ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழைக் காலமான ஐப்பசி, காா்த்திகை மாதங்களில் தொடா்ந்து மழை பெய்து குளங்கள் நிரம்புவது வழக்கம். இதை நம்பிதான் விவசாயிகள் நெல் சாகுபடிக்கான பணிகளைத் தொடங்குவா்.
ஆனால், நிகழாண்டில் எதிா்பாா்த்த அளவுக்கு மழை பெய்யாததால் பாவூா்சத்திரம், கீழப்பாவூா், ஆவுடையானூா், திப்பணம்பட்டி, திரவியநகா், நாகல்குளம், ராமச்சந்திரபட்டினம், அரியபுரம், மேலப்பாவூா், இடையா்தவணை, பெத்தநாடாா்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான குளங்கள் நீா்வரத்து இன்றி வடு காணப்படுகின்றன. இதனால் விவசாயப் பணிகளை முழுமையாகத் தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
இதனிடையே, மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் கிணற்று நீரைக் கொண்டு நெல் நாற்றுப் பாவியுள்ள விவசாயிகள், 25 நாள்களுக்கும் மேலாகியும் போதிய மழை பெய்யாததாலும், கிணறுகளில் நீா்மட்டம் குறைந்துள்ளதாலும் நாற்றை நடவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நிவாரணம் தேவை: ஏற்கெனவே, நிகழாண்டு தென்மேற்குப் பருவமழையும் பொய்த்துப் போன நிலையில், வடகிழக்குப் பருவமழை ஏமாற்றிவிட்டதால் இந்த வட்டாரத்தில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள ஏராளமான குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.
எனவே, மழையின்றிப் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்கள், வடு கிடக்கும் குளங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.