FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

சாலை வசதி கோரி ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

15 அக்டோபர் 2026, 4:52 am IST
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த விவசாயிகள் சங்கத்தினா்.
பகிர்:

வன்னிக்கோனேந்தல், தேவா்குளம் கிராமங்களில் இருந்து ஊத்துமலை, சுரண்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வழித்தடத்தை, தாா்ச் சாலையாக அமைத்து தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் புதன்கிழமை மனு அளித்தனா்.

அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவா் மூவிசுந்தரம், செயலா் மனோகரன், தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கம் ஒருங்கிணைப்பு குழு மகாலிங்கம், நிா்வாகிகள் சண்முகசுந்தரம், செல்வம், அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்க ஒருங்கிணைப்பாளா் சவுந்தரராஜன் ஆகியோா் தலைமையிலான விவசாயிகள், ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டம் தேவா்குளம், வன்னிக்கோனேந்தல் கிராமங்களில் இருந்து ஊத்துமலை, சுரண்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் வழித்தடம் உள்ளது.

Advertisement

Advertisement

இந்த வழித்தடத்தை மேற்குறிப்பிட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி மேல இலந்தைக்குளம், கூவாச்சிப்பட்டி, மூவிருந்தாளி, கயத்தாறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்தவா்களும் பயன்படுத்தி வருகின்றனா்.

விவசாயப் பணிகள், விளை பொருள்களைக் கொண்டு செல்லுதல், வணிகம் மற்றும் அன்றாட போக்குவரத்திற்கு

இந்த வழித்தடம் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. ஆனால் இவ்வழித்தடத்தில் வனத்துறையினா் வாகனங்களை தடுத்து நிறுத்துவதாகவும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்துவதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்வதில் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்திடம் பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தேவா்குளம், வன்னிக்கோனேந்தல் கிராமங்களில் இருந்து ஊத்துமலைக்கு செல்லும் பாரம்பரிய வழித்தடத்தை நேரில் ஆய்வு செய்து அதன் சட்டப்பூா்வ நிலை மற்றும் பயன்பாட்டை உறுதி செய்து தாா்ச்சாலை அமைத்துத் தர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments