நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் "தொழில் தொடங்க வங்கி மூலம் கடனுதவி'
ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் கடனுதவி அளிக்கப்படுகிறது; இதில் 30 சதவீதம் பெண்கள், 15 சதவீதம் சிறுபான்மையினருக்கு கடனுதவி வழங்கப்படும் என திருநெல்வேலி மாநகராட்சி மேயர் இ. புவனேஸ்வரி தெரிவித்தார்.
ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் கடனுதவி அளிக்கப்படுகிறது; இதில் 30 சதவீதம் பெண்கள், 15 சதவீதம் சிறுபான்மையினருக்கு கடனுதவி வழங்கப்படும் என திருநெல்வேலி மாநகராட்சி மேயர் இ. புவனேஸ்வரி தெரிவித்தார்.
மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் சார்பில் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் வகையில் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள செயலாக்கக் குழுவின் முதல் கூட்டம் திருநெல்வேலி மாநகராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மேயர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். ஆணையர் சு. சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ். அழகர்சாமி, கனரா வங்கி முதுநிலை மேலாளர் வி.எஸ். முத்து குமாரசாமி, பேங்க் ஆப் பரோடா வங்கியின் முதுநிலை மேலாளர் டி. வெங்கட் சுப்பிரமணியன், பாண்டியன் கிராம வங்கியின் துணை மேலாளர் எம். ரஞ்சிதா, மாநகராட்சி சமுதாய அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
கூட்டத்தில் மேயர் பேசியதாவது: மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம், தொழில் தொடங்குவதற்காக தனி நபர்களுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம், குழுக்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படும். கடனுதவிக்கான வட்டி விகிதத்தில் மானியம் வழங்கப்படும். அதாவது கடன் தொகைக்கான வட்டியில் 7 சதவீதத்துக்கும் அதிகமான வட்டித் தொகையை மாநகராட்சியே செலுத்தும்.
மேலும், தொழில்முனைவோருக்கு பொருள்களை சந்தைப்படுத்துதலுக்கான நேர்த்திகள், நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்படும்.
இத் திட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடன் பெறும் பயனாளிகளில் 30 சதவீதம் பெண்கள், 3 சதவீதம் மாற்றுத் திறனாளிகள், 15 சதவீதம் சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
இத்திட்டத்தில் கடனுதவி பெற கல்வித் தகுதி தேவையில்லை. தனிநபர்கள் கடனுதவி பெறுவதற்கு 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். கடனை 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் சமுதாய அமைப்பாளர்களை தொடர்புகொண்டு கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ளலாம் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.