FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கருணாநிதி மறைவு: பாளையங்கோட்டையில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மௌன ஊர்வலம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் மெளன ஊர்வலம் சென்றனர்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் மெளன ஊர்வலம் சென்றனர்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில் பாளையங்கோட்டையில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் சார்பில் மெளன ஊர்வலம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், மதிமுக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டனர்.
 பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலை முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம், பாளையங்கோட்டை தெற்கு பஜார்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக சமாதானபுரத்தில் நிறைவடைந்தது. சமாதானபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் சார்பில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த ஊர்வலத்துக்கு திமுக மாநகர சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் கமாலுதீன் தலைமை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ராஜீவ்காந்தி, பொதுக்குழு உறுப்பினர் உமாபதி சிவன், ஜேம்ஸ், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி சுத்தமல்லி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
மேலப்பாளையத்தில்... இதேபோல் மேலப்பாளையத்திலும் அனைத்துக் கட்சியின் சார்பில் மெளன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் வாவர் பள்ளிவாசல் பகுதியில் தொடங்கி குறிச்சி சாலை, சந்தை உள்ளிட்ட பகுதிகள் வழியாக பஜார் திடலில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து பஜார் திடலில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக நிர்வாகிகள் சாகுல் ஹமீது, சுடலை கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி பழனி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி மீரான் மைதீன், தமுமுக நிர்வாகி ரசூல் மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
நகரத்தில்...திருநெல்வேலி நகரத்திலும் திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், லட்சிய திமுக உள்ளிட்ட அரசியல்கள் கட்சிகள் மற்றும் வணிகர்கள் சங்கம், நகைக் கடை உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் மெளன ஊர்வலம் நடைபெற்றது. 
இந்த ஊர்வலம் சந்தி விநாயகர் கோயில் அருகே தொடங்கி, நான்கு ரதவீதிகள் வழியாக மீண்டும் சந்தி விநாயகர் கோயில் அருகே நிறைவடைந்தது. 

மானூரில்...
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி மறைவையொட்டி மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் திமுக உள்பட பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.
மானூர் காவல் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சித் தலைவர் அசோக் தலைமை வகித்தார். மதிமுக நிர்வாகி முகம்மதுஅலி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஏசுராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மு.கருணாநிதியின்  படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
தெற்குவாகைகுளத்தில் மு.கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முத்துசாமி தலைமை வகித்தார். 
திமுக தொண்டர்கள் சின்னஇசக்கி, சொக்கையா, கணேசன், மாரியப்பன் ஆகியோர் மொட்டையடித்தும், கருணாநிதி திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் முருகேசன், நல்லதம்பி, பிச்சை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments