தாமிரவருணி வெள்ளத்தை திருப்ப வழியில்ல: வறட்சியால் தவிக்கும் மானூர், பள்ளமடை வட்டார விவசாயிகள்
தாமிரவருணியில் வீணாகும் வெள்ளநீரை திருப்பிவிட வழியில்லாததால் மானூர், பள்ளமடை குளங்கள் வறட்சியின் பிடியில் உள்ளன.
தாமிரவருணியில் வீணாகும் வெள்ளநீரை திருப்பிவிட வழியில்லாததால் மானூர், பள்ளமடை குளங்கள் வறட்சியின் பிடியில் உள்ளன. ஆகவே, தொலைநோக்குப் பார்வையுடன் புதிய கால்வாய் திட்டத்தையும், சிற்றாறு நீர்வரத்து கால்வாய் புனரமைப்பையும் தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானூர் பெரியகுளம் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீமாற வல்லப பாண்டியனால் வெட்டப்பட்டது. 1,695 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதிகளும், 190 மில்லியன் கனஅடி கொள்ளளவும் கொண்டதாகும். மானூர், மாவடி, மதவக்குறிச்சி, எட்டான்குளம் ஆகிய 4 ஊராட்சிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் இக் குளத்தால் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர சுமார் 25 கிராமங்களுக்கு நீராதாரமாகவும் இருக்கிறது. மன்னர்கள் காலத்தில் தாமிரவருணி ஆற்றில் முக்கூடல் அருகேயுள்ள திருப்புடைமருதூர் பகுதியில் மண்ணால் அணை கட்டி மதிகெட்டான் கால்வாய் வழியாக மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் கால்வாய் தூர்ந்து மாயமான நிலையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தாமிரவருணியின் கிளை நதியான சித்ரா நதி எனப்படும் சிற்றாற்றிலிருந்து மானூர் குளத்துக்கு நீர்வரத்து கால்வாய் அமைக்கப்பட்டது. இதற்காக வீரகேரளம்புதூர் அருகேயுள்ள தாயார் தோப்பு என்ற இடத்தில் சிற்றாற்றின் குறுக்கே 215 மீட்டர் நீளத்தில் நெட்டூர் பகுதியில் அணை கட்டப்பட்டுள்ளது. 32.50 கி.மீ. தொலைவுக்கு நெட்டூரில் இருந்து மானூர் வரை கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. 19 குளங்கள் நிரம்பி 20 ஆவது குளமாக மானூர் பெரியகுளத்திற்கு சிற்றாறு தண்ணீர் வர வேண்டும். ஆனால், சிற்றாறு தண்ணீர் வந்து சேராத நிலையில் மானூர் குளம் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.
பள்ளமடை குளம்: மானூர் வட்டத்தில் உள்ள பள்ளமடையில் சுமார் 750 ஏக்கர் பரப்பளவில் பள்ளமடை பாசனக் குளம் உள்ளது. பல்லிக்கோட்டை, பள்ளமடை, நெல்லை திருத்து, அலவந்தான்குளம், புளியங்கொட்டாரம், தென்கலம்புதூர், மேலத்தென்கலம், நல்லம்மாள்புரம் எனச் சுற்றுவட்டார கிராம மக்கள் இந்தப் பாசனக்குளத்தை நம்பி உள்ளனர். இக்குளத்தின் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நெல், உளுந்து, பருத்தி ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. நெட்டூர் அணையில் இருந்து பல்லிக்கோட்டை கால்வாய் மூலம் 17 குளங்கள் நிரம்பிய பின்பே பள்ளமடை குளத்திற்கு தண்ணீர் வந்து சேரும். கடந்த 2014, 2015 ஆம் ஆண்டுகளில் பருவமழைக் காலத்தில் ஓரளவு பெய்த மழையால் குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்து பயிர் சாகுபடி நடைபெற்றது. அதன்பின்பு 2016, 2017 ஆம் ஆண்டுகளில் பருவமழை பொய்த்து பயிர் சாகுபடி இல்லாததால் பள்ளமடை சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளும், விவசாயக் கூலித்தொழிலாளர்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.
இதுகுறித்து மானூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஏ.அசோக் கூறியது: மானூர், பள்ளமடை பகுதியில் விவசாயத்தை நம்பி ஏராளமான பெண்கள் உள்ளனர். நாற்று நடுதல், களை எடுத்தல், அறுவடை பணிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் செல்கிறார்கள். ஆனால், பாசன நீர் இரு குளங்களுக்கும் வந்து சேரவில்லை. மானூர் குளத்திற்கு முன்பாக உள்ள தெற்குப்பட்டி, கல்லத்திக்குளமே இன்னும் நிரம்பவில்லை. அதனால் சாகுபடி பணிகளைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். இப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேல்மட்ட கால்வாய் மூலம் தாமிரவருணியில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை பள்ளமடை குளத்திற்கு கொண்டு வர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே விவசாயிகளின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். மானூர் குளத்தில் தாமிரவருணி தண்ணீரை சேமித்தால் அதன் மூலம் இயற்கையாகவே மதுரை வரை குடிநீருக்காக மோட்டார் பயன்படுத்தாமல் தண்ணீரை கொண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, தொலைநோக்குப் பார்வையுடன் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
ஆக்கிரமிப்புகள் அதிகம்: பள்ளமடையைச் சேர்ந்த காளிராஜ் கூறியது: பள்ளமடை குளத்திற்கு வரும் நீர்வரத்து கால்வாய்களிலும், நெட்டூர் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் பிரிந்து வரும் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. அருணாசலப்பேரி பகுதியில் கால்வாயில் இருந்து தண்ணீர் குடியிருப்புகளுக்குள் செல்லும் வகையில் உள்ளது. ஆகவே, பொதுப்பணித் துறையினரும், வருவாய்த் துறையினரும் கால்வாயை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும். குற்றாலத்தில் வெள்ளம் பல நாள்கள் பெருக்கெடுத்த நிலையிலும் பள்ளமடைகுளத்திற்கு ஒரு சொட்டு நீர்கூட வந்து சேரவில்லை. இதுதவிர முந்தைய குளங்கள் முழுமையாக நிரம்பிய பின்பே அடுத்த குளத்திற்கு தண்ணீர் வழங்குவதால் கடைமடை குளங்களின் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே, மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பின் பேரில் ஒவ்வொரு குளத்துக்கும் முறை வைத்து நீர் வழங்க வேண்டும். அதேபோல தாமிரவருணி வெள்ளநீரை மானூர் வட்டத்திற்கு திருப்பும் வகையில் புதிய அணைக்கட்டுத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
"நீர்வழிப் பாதைகளில் மராமத்து அவசியம்'
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக திருநெல்வேலி மண்டல முதல்வர் ஜி.சக்திநாதன் கூறியது: மானூர் குளத்தின் நீர்வழிப் பாதைகளில் நெட்டூர் அணைக்கட்டில் இருந்து மானூர் வரை 35.5 கி.மீ. தொலைவுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டில் பொறியியல் மாணவர்களைக் கொண்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கால்வாய் 11.5 மீட்டர் அகலமும், 11 மீட்டர் ஆழமும் கொண்டதாக முதலில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், பல இடங்களில் அகல-ஆழங்கள் முறையாக இல்லை. அதனை ஓரளவு சீரமைத்தோம். அதன்பின்பு பெய்த மழையில் நீர்வரத்து தடையின்றி இருந்தது. 2014-15 ஆம் ஆண்டுகளில் மானூர் குளத்தில் இருந்து 54 நாள்கள் வரை மறுகால் பாய்ந்தோடியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அதன்பின்பு நீர்வரத்து கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு நீர்வரத்து கால்வாயையும் பராமரிக்க அரசு முன்வராவிட்டால் விவசாயிகளே மராமத்து செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். அதனை உணர்த்தும் வகையில் மீண்டும் பொறியியல் மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்னும் சில நாள்களில் மாணவர்கள் எந்தெந்தப் பகுதிகளில் சீரமைப்பு தேவை என்பதை தெரிவிப்பார்கள். அதனை மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித் துறையினரிடம் அறிவுறுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.