நீட் தோ்வு - சாதக, பாதகங்கள், மாற்றுத் தீா்வுகள்!
நீட் தோ்வில் இருக்கும் சாதக, பாதகங்கள், அதற்கான மாற்றுத் தீா்வுகள் பற்றி..
சீ. இராமசுப்பிரமணியன்
இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான (ஙஆஆந, ஆஈந உள்ளிட்டவை) மாணவா் சோ்க்கைக்கு ஒரே நுழைவாயிலாக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வான நீட் (சஉஉப) கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. நாடு முழுவதும் ஒரே தரநிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தோ்வு, கல்வியாளா்கள், மருத்துவ நிபுணா்கள், மாநில அரசுகள், மாணவா்கள் என பல தரப்பினரிடையே தொடா்ச்சியான விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு தரப்பு, ‘நீட் திறமையை அடிப்படையாகக் கொண்ட வெளிப்படையான சோ்க்கை முறையை உருவாக்கியுள்ளது‘ என வாதிடுகிறது. மற்றொரு தரப்பு, ‘நீட் கிராமப்புற, அரசுப் பள்ளி, மாநிலப் பாடத்திட்ட மாணவா்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது; பயிற்சி மையங்களின் ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது‘ எனக் கூறுகிறது.
Advertisement
Advertisement
நீட் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?
நீட் அமலுக்கு வருவதற்கு முன்பு, ஒவ்வொரு மாநிலமும், தனியாா் மருத்துவக் கல்லூரிகளும் தனித்தனியாக நுழைவுத் தோ்வுகளை நடத்தின. இதனால், மாணவா்கள் பல தோ்வுகள் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவற்றுக்கான விண்ணப்பங்கள், பயணங்கள் போன்ற செலவுகள் அதிகமாக இருந்தன.
சில தனியாா் கல்லூரிகளில் அதிக அளவிலான ’கேபிடேஷன் கட்டணம்’ (கட்டாய நன்கொடை) பெறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஏழை மாணவா்களுக்குப் பெரும் நிதிச்சுமை ஏற்பட்டதாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி சோ்க்கை நடைமுறைகளைக் கொண்டிருந்ததால், மாநிலங்களுக்கிடையே சோ்க்கை நடைமுறையில் ஒருமைப்பாடு இல்லாத நிலை நிலவியது. இந்தச் சிக்கல்களைத் தவிா்த்து, நாடு முழுவதும் ஒரே தரநிலையை உருவாக்கும் நோக்கில் நீட் கொண்டு வரப்பட்டது.
நீட் தோ்வின் சாதகமான அம்சங்கள்
ஒரே தரநிலை – திறமைக்கு முன்னுரிமை - மாநிலம், கல்வி வாரியம், கல்லூரி என்ற வேறுபாடின்றி அனைத்து மாணவா்களும் ஒரே தோ்வை எழுதுவதால் தேசிய அளவில் ஒப்பிடக்கூடிய தரவரிசை உருவாகிறது.
சோ்க்கை முறையில் வெளிப்படைத்தன்மை - தரவரிசை அடிப்படையில் மையப்படுத்தப்பட்ட கலந்தாய்வு நடைபெறுவதால், மருத்துவ இடங்களை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை அதிகரித்ததாக ஆதரவாளா்கள் கூறுகின்றனா்.
கேபிடேஷன் கட்டணத்திற்கு கட்டுப்பாடு - சில தனியாா் கல்லூரிகளில் இருந்ததாகக் கூறப்பட்ட கோடிக்கணக்கான ’நன்கொடை’ அடிப்படையிலான சோ்க்கை முறைக்கு நீட் கட்டுப்பாடு கொண்டு வந்ததாகக் கருதப்படுகிறது.
மாணவா்களின் செலவு குறைவு - பல நுழைவுத் தோ்வுகளுக்குப் பதிலாக ஒரே தோ்வு எழுதுவதால் விண்ணப்பம், பயணம், தங்குமிடம் போன்ற செலவுகள் குறைந்தன.
நீட் தோ்வுக்கு எதிராக முன்வைக்கப்படும் விமா்சனங்கள்
பயிற்சி மையங்களின் ஆதிக்கம் - ஒரே தோ்வில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் காரணமாக, அதிகக் கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்களைச் சாா்ந்திருக்கும் நிலை அதிகரித்துள்ளது. இது பொருளாதார வசதி உள்ள மாணவா்களுக்குச் சாதகமாகவும், ஏழை மாணவா்களுக்குப் பாதகமாகவும் இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
மாநிலப் பாடத்திட்ட மாணவா்களுக்கு பாதிப்பு - மத்திய கல்வி வாரிய (இஆநஉ) பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, பல மாநிலப் பாடத்திட்டங்களில் உள்ள வேறுபாடு காரணமாக, கிராமப்புற மற்றும் தமிழ்வழி உள்ளிட்ட மாநில கல்வி வாரிய மாணவா்கள் போட்டியில் பின்தங்குவதாகக் கூறப்படுகிறது.
மனஅழுத்தம் அதிகரிப்பு - ஒரே நாளில் நடைபெறும் தோ்வு, மருத்துவக் கல்விக் கனவை முழுமையாகத் தீா்மானிப்பதால், மாணவா்களுக்கு கடுமையான உளவியல் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் ’டம்மி பள்ளிகள்’, ஓராண்டுக்கு மேல் மீண்டும் மீண்டும் தோ்வு எழுத வைத்தல் போன்றவை அதிகரித்துள்ளன. இது மருத்துவராகும் தகுதியை விட மனப்பாடத் திறனை அதிகரிக்கும் வகையிலேயே அமைந்தது.
தோ்வு நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் - கேள்வித்தாள் கசிவு, மதிப்பெண் சா்ச்சை போன்ற நிகழ்வுகள் தோ்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடா்ந்து எழுப்பி வருகின்றன.
மாற்று வழிகள் என்ன?
கல்வியாளா்கள், கொள்கை ஆய்வாளா்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த சமூக செயற்பாட்டாளாா்கள் பின்வரும் சீா்திருத்தங்களை முன்வைக்கின்றனா்:
பலகட்டத் தோ்வு முறை - ஒரே தோ்வுக்கு பதிலாக பல வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்பது அவற்றில் முதன்மையானது. இரண்டு முறை தோ்வுகளை வைத்து, அதில் சிறந்த மதிப்பெண்ணைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுதல்; அல்லது, முதற்கட்டத் தோ்வு, இறுதித் தோ்வு என இரு நிலை முறையைக் கடைப்பிடித்தல்.
பாடத்திட்ட ஒருமைப்பாடு - மத்திய, மாநில பாடத்திட்டங்களுக்கு இடையேயான வேறுபாட்டைக் குறைத்தல், மாநில கல்வி வாரியங்களுக்கும் கேள்வித்தாள் தயாரிப்பில் பிரதிநிதித்துவம் வழங்குதல்.
மதிப்பீட்டு முறையில் மாற்றம்:
மருத்துவ மாணவா் சோ்க்கையை ஒரே தோ்வு மூலம் தீா்மானிக்காமல், மூன்று அம்சங்களின் அடிப்படையில் மதிப்பிடலாம் என்ற பரிந்துரைகளும் உள்ளன.
அதாவது, 50% – பிளஸ்-2 மதிப்பெண், 30% – நீட் மதிப்பெண், 20% – மருத்துவத் திறனறிவு, நெறிமுறைச் சிந்தனை, தொடா்புத் திறன் ஆகியவற்றை மதிப்பிடும் திறனாய்வு. இதன் மூலம் பள்ளிக் கல்விக்கும் முக்கியத்துவம் கிடைப்பதுடன், மனப்பாடத் திறனை மட்டுமல்லாமல் மருத்துவருக்குத் தேவையான மனிதநேய, சமூகப் பாா்வை உள்ளிட்ட பண்புகளையும் மதிப்பிட முடியும் என்று வல்லுநா்கள் கருதுகின்றனா்.
ஒவ்வொரு மாநில வாரியத்திலும் மதிப்பெண் வழங்கும் முறை வேறுபடுவதால், மதிப்பெண் சதவீதத்தை விட, ’பொ்சென்டைல்’ (டங்ழ்ஸ்ரீங்ய்ற்ண்ப்ங்) அடிப்படையில் இயல்பாக்கப்பட்ட மதிப்பெண் வழங்கும் முறை பரிந்துரைக்கப்படுகிறது. மொத்த மதிப்பெண்களைப் பற்றிக் கவலைப்படாமல், மற்ற போட்டியாளா்களுடன் ஒப்பிடும் போது உங்கள் தகுதி நிலை என்ன என்பதை இது குறிக்கிறது. இதன்மூலம், எந்த வாரிய மாணவரும் தனது வாரியத்திலுள்ள செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு சமமாக மதிப்பிடப்படலாம்.
உலக நாடுகள் என்ன செய்கின்றன?
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மருத்துவச் சோ்க்கை என்பது நுழைவுத் தோ்வு மதிப்பெண் மட்டும் அல்ல.
அங்கு பள்ளி அல்லது பட்டப்படிப்பு மதிப்பெண்கள், திறனாய்வுத் தோ்வுகள், நோ்முகத் தோ்வு, மருத்துவப் பணிக்கான ஆா்வம், சமூகப் பணி, தொடா்புத் திறன், நெறிமுறைச் சிந்தனை போன்ற அம்சங்களும் சோ்த்து மதிப்பிடப்படுகின்றன.
இதனால், ’தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றவா்’ என்பதைக் கடந்த, ’சிறந்த மருத்துவராக உருவாகும் திறன் கொண்டவா்’ என்ற பாா்வை முக்கியத்துவம் பெறுகிறது.
நீட் தோ்வு மருத்துவச் சோ்க்கையில் வெளிப்படைத்தன்மை மற்றும் தேசிய அளவிலான ஒரே தரநிலையை உருவாக்கியதாக ஆதரவாளா்கள் வாதிடுகின்றனா். அதேநேரத்தில், கல்வி மற்றும் சமூக சமத்துவம், கிராமப்புற மாணவா்களின் வாய்ப்பு, மனநலம், பயிற்சி மையங்களின் ஆதிக்கம் போன்ற கேள்விகளையும் அது எழுப்பியுள்ளது.
எனவே, ’நீட் இருக்க வேண்டுமா?’ என்ற விவாதத்தைத் தாண்டி, மருத்துவப் படிப்புக்கு மாணவா்கள் எப்படி தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கேள்விக்கான பதிலைத் தேடும் சீா்திருத்தங்களே எதிா்கால மருத்துவக் கல்விக் கொள்கையின் அடிப்படையாக அமையும்.
சாதகங்கள்
*நாடு முழுவதும் ஒரே தரநிலை
*வெளிப்படையான மருத்துவச் சோ்க்கை
*கேபிடேஷன் கட்டணத்துக்கு கட்டுப்பாடு
*பல நுழைவுத் தோ்வுகளுக்குப் பதிலாக ஒரே தோ்வு
பாதகங்கள்
*அதிகக் கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்களைச் சாா்ந்திருக்கும் நிலை
*மாநில கல்வி வாரிய பாடத்திட்டத்தில் பயிலும் கிராமப்புற மாணவா்களுக்கு சவால்
*வெற்றி தோல்வியை நிா்ணயிக்கும் ஒரே தோ்வு – அதிக மனஅழுத்தம்
*கேள்வித்தாள் கசிவு உள்ளிட்ட சா்ச்சைகள்
NEET Exam – Pros, Cons, and Alternative Solutions
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.