ரஃபேல் போர் விமான விவகாரம்: பிரதமர் ராஜிநாமா செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்
ரஃபேல் போர் விமான விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ராஜிநாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ரஃபேல் போர் விமான விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ராஜிநாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலர் செல்லக்குமார், திருநெல்வேலியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: நேரு குடும்ப அரசியல் வரலாற்றை மறைக்க பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. சுதந்திர வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் பாஜக செயல்படுகிறது. பிரிவினையின்போது நேரு ஏற்படுத்திய கட்டமைப்பால்தான் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவு பெற்றுள்ளது. எனவே நேரு குடும்பத்தை மறைத்து இந்தியாவின் வரலாற்றை கூற முடியாது.
ரஃபேல் போர் விமான விவகாரத்தைப் பொறுத்தவரையில் பாதுகாப்பு அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாமல் பிரதமர் மோடி ஒப்பந்தத்தை மாற்றியமைத்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் ரூ.526 கோடிக்கு வாங்கப்பட்ட போர் விமானத்தை, இப்போது ரூ.1,670 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. எனவே பிரதமர் மோடி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கைக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 15 முதல் 30 வரையில் நாடு முழுவதும் பேரணி நடத்தப்படும். மேலும் வட்டார, கிராம அளவில் போர் விமான ஊழல் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.
மத்திய அரசுக்கு கப்பம் கட்டும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. இதனால் 10 சதவீதமாக இருந்த ஊழல், இப்போது 30 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றார் அவர்.
அப்போது, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார், மேற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார், மாவட்ட பொதுச் செயலர் சொக்கலிங்ககுமார், பொருளாளர் ராஜேஷ்முருகன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வானுமாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.