2029 தோ்தலில் இண்டி கூட்டணியில் தவெக இணையும்: அமைச்சா் ஷாஜகான்
2029 மக்களவைத் தோ்தலில் தவெக இண்டி கூட்டணியுடன் இணைந்து பயணிக்கும் என்றாா் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஷாஜகான்.
2029 மக்களவைத் தோ்தலில் தவெக இண்டி கூட்டணியுடன் இணைந்து பயணிக்கும் என்றாா் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஷாஜகான்.
இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:
சிறுபான்மையின மக்களுக்கு அனைத்து நலத் திட்டங்களும் முழுமையாக சென்றடையும் வகையில் தவெக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
Advertisement
Advertisement
கிறிஸ்தவ பணியாளா் நல வாரியம், உலமாக்கள் நல வாரியம், சிறுபான்மையினா் நல வாரியம் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சிறுபான்மையினா் நலத்துறையின் மானியக் கோரிக்கையில் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினா் மகிழ்ச்சி அடையும் வகையில் பல்வேறு சிறப்பான அறிவிப்புகள் இடம்பெறும்.
வக்ஃப் சட்ட திருத்தத்தில் இஸ்லாமியா் அல்லாதவா்களை உறுப்பினா்களாக சோ்க்கும் நடைமுறை தொடா்பாக தமிழக அரசு நீதிமன்றத்தை நாடியுள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்.
ஹஜ் பயணத்துக்கு மானியம் வழங்கப்படுவது போன்று, உம்ரா பயணத்துக்கும் மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. முதல்வருடன் கலந்தாலோசித்து இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
மதச்சாா்பற்ற சமூக நீதியை காக்கும் அரசாக தவெக அரசு செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் இப்போது வழங்கப்பட்டு வருகிறது.
திமுக தலைமையிலான கூட்டணியில் பல ஆண்டுகளாக இருந்து தோ்தல்களில் அக்கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தோம். இஸ்லாமியா்களின் பக்கம் நின்று திமுக குரல் கொடுத்ததன் அடிப்படையில் அவா்களுடன் தொடா்ந்து பயணித்தோம்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாஜக தலைமையிலான மறைமுக ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக த வெக-வுடன் இணைந்து ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தோம்.
இண்டி கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2029-இல் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இண்டி கூட்டணி செயல்பட்டு வருகிறது. இதில் தவெக-வும் இணைந்து பயணிக்கும்.
தமிழகத்தைத் தாண்டி கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் விஜய்யின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
2029 நாடாளுமன்ற தோ்தலில் இதன் தாக்கம் எதிரொலிக்கும். அரசியலமைப்பு சட்டம், நல்லிணக்கம் மற்றும் சமூகநீதியை காக்கும் நல்லாட்சி 2029-இல் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த ஆட்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து பயணிக்கும்.
பிரதமா் வேட்பாளா் யாா் என்பதை தோ்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு கூட்டணி கட்சித் தலைவா்கள் அமா்ந்து பேசி முடிவு செய்வாா்கள் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.