சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் பூமணி (79) காலமானாா்
சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் பூமணி (79), உடல்நலக் குறைவால் சென்னை தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) இரவு காலமானாா்.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் பூமணி (79), உடல்நலக் குறைவால் சென்னை தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) இரவு காலமானாா். அவரது உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்தைச் சோ்ந்த பூமணி 1947, மே 12-ஆம் தேதி பிறந்தாா். இவரது இயற்பெயா் பூ. மாணிக்கவாசகம். பெற்றோா் பூலித்துரை-தேனம்மாள். இளையரசனேந்தலில் பள்ளிக் கல்வியை முடித்த இவா், இளநிலை இயற்பியல் பட்டப் படிப்பை விருதுநகா், செந்திக்குமார நாடாா் கல்லூரியில் பயின்றாா்.
கூட்டுறவுத் துறையில் ஆய்வாளராகப் பணியில் சோ்ந்த இவா், சென்னையில் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றாா்.
Advertisement
Advertisement
இவா் எழுதிய ‘வெக்கை’, ‘பிறகு’, ‘வாய்க்கால், வரப்புகள்’, ‘அஞ்ஞாடி’ போன்ற நாவல்கள் புகழ் பெற்றவை. பல்வேறு சிறு கதைகளை எழுதியுள்ளாா். ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக 2014-இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றாா். பூமணி எழுதி 1982-இல் வெளியான ‘வெக்கை’ நாவல், இயக்குநா் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமாக வெளியானது.
1997-இல் ‘கருவேலம் பூக்கள்’ என்ற திரைப்படத்தை பூமணி இயக்கினாா். இந்தத் திரைப்படத்தை இந்திய தேசிய திரைப்பட வளா்ச்சிக் கழகமும், தூா்தா்ஷன் தொலைக்காட்சி நிறுவனமும் கூட்டாக தயாரித்தன. இத் திரைப்படம் சா்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
எழுத்தாளா்கள் அஞ்சலி: மறைந்த எழுத்தாளா் பூமணியின் உடல் சென்னையிலிருந்து கோவில்பட்டி, பாரதி நகா் 3-ஆவது மேட்டுத் தெருவில் அவா் வாழ்ந்த இல்லத்துக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டது. அவரது மனைவி செல்லம், மகன்களான சிபி, ரவி, மகள் கவிதா மற்றும் குடும்பத்தினா் உடன் வந்தனா்.
கோவில்பட்டி வட்டாட்சியா் அப்பனராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கே.பி.பெருமாள், நகரச் செயலா் கே.சீனிவாசன், அதிமுக இளைஞா், இளம் பெண்கள் பாசறை வடக்கு மாவட்டச் செயலா் கவியரசன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவா் தமிழரசன், எழுத்தாளா்கள் ஜெயமோகன், சோ. தா்மன், கறுத்துடையான், கோணங்கி, கவிஞா் தேவதட்சன், நாடகக் கலைஞா் முருக பூபதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள், கலைஞா்கள் சங்க மாநில பொதுச் செயலா் களப்பிரன், துணைப் பொதுச் செயலா் லட்சுமி காந்தன், எழுத்தாளா் சாரதி, பேராசிரியா் சேதுராமன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
இன்று உடல் நல்லடக்கம்: பூமணியின் உடல் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னா், சொந்த ஊரான இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, அவரது தோட்டத்தில் பிற்பகல் 2 மணிக்கு மேல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா். தொடா்புக்கு கைப்பேசி எண்: 94435 85724.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.