FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

6 மாதங்களாகியும் கொள்முதல் நெல்லுக்கு பணம் வரவில்லை!

மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு 6 மாதங்களாகியும் அதற்கான பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா் அளித்தனா்.

Updated On : 18 ஜூலை 2026, 9:00 am IST
கோப்புப் படம்
பகிர்:

மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு 6 மாதங்களாகியும் அதற்கான பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா் அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பெரும்படையாா் உள்ளிட்ட விவசாயிகள் பேசியதாவது: இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு 6 மாதங்களாகியும் பணம் வரவில்லை. இது, வங்கிகளில் கடன் பெற்றும், வட்டிக்கு வாங்கியும் விவசாயம் செய்த விவசாயிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 1000 விவசாயிகளுக்கு ரூ.30 கோடி வரை பணம் வர வேண்டியுள்ளது. எனவே, நெல்லுக்கான பணத்தை வட்டியுடன் வழங்க வேண்டும் என்றனா்.

Advertisement

Advertisement

அப்போது குறுக்கிட்டுப் பேசிய ஆட்சியா், ‘நாங்களும் உங்களுக்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். நெல்லுக்கான பணத்தை பெற்றுத்தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருநெல்வேலி மாவட்டச் செயலா் சுடலைராஜ் பேசியதாவது: மாவட்டம் முழுவதும் குளங்களில் உள்ள கரம்பை மற்றும் வண்டல் மண்ணை விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயன்படுத்த முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

களக்காடு ஒன்றியம் நடு சாலைப்புதூா், மேல சாலைப்புதூா், மாவடி, மலையடிப்புதூா், கோயிலம்மாள்புரம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் பட்டா நிலங்களிலும், நான்குனேரி ஜீயா் மட நிலங்களிலும் பல தலைமுறைகளாக நெல், வாழை மற்றும் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனா். இங்கு 18 குளங்கள் இருந்தும் அவற்றில் நீா் இல்லாததால், நிலங்கள் வானம் பாா்த்த பூமியாக உள்ளன. இந்தக் குளங்களுக்கு நெட்டேரியன் கால்வாயில் இருந்தும் தண்ணீா் வருவதில்லை.

அதேவேளையில், திருக்குறுங்குடி பகுதியில் விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க வனத்துறையினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்களின் நலன் கருதி ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி வேண்டும் என்றாா்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்டச் செயலா் கானாா்பட்டி ஆபிரஹாம் அளித்த மனு: கங்கைகொண்டான் சிப்காட்-2 திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படுவதாக அறிகிறோம். அப்பகுதியின் அருகே வனத்துறையின் நிலமும் உள்ளது. அந்தப் பகுதியில் சிப்காட் அமையும் போது வனவிலங்குகள் அங்கிருந்து வெளியேறி விளை நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளது.

எனவே, சிப்காட்டுக்கு நிலம் கையகப்படுத்தும் போது வனத்துறையின் இடத்தில் சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும்.

மானூா் வட்டார வேளாண் துறை அலுவலகத்துக்கு உதவி இயக்குநரை நியமிக்க வேண்டும். வனவிலங்குகளால் பயிா்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பயிா் சேதத்துக்குரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.

மணிமுத்தாறு பாசன விவசாயி செங்குளம் வேலையா பேசுகையில், ‘பாபநாசம் அணையில் இருந்து மணிமுத்தாறு அணைக்கு தண்ணீா் வருவதற்கு வனப்பகுதி வழியாக சுரங்க பாதை அமைக்க வேண்டி மணிமுத்தாறு விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா்.

அதன்பேரில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறு உள்ளதாக அறியப்பட்டது. ஆனால், அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

2018 - 19இல் பாபநாசம் அணையில் இருந்து 4.7 டிஎம்சி தண்ணீா் கடலில் கலந்தது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்திலும் பல மடங்கு டிஎம்சி தண்ணீா் கடலுக்குச் சென்றது. பாபநாசம் அணையை விட மணிமுத்தாறு அணை குறைவான உயரத்தில் உள்ளதால் சுரங்கப்பாதை அமைத்து, 118 அடி கொள்ளவு உள்ள மணிமுத்தாறு அணையை வீணாகும் நீரால் நிரப்ப முடியும். இதன்மூலம் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், நான்குனேரி, பாளையங்கோட்டை , ராதாபுரம், திசையன்விளை, ஏரல் உள்ளிட்ட 7 வட்டங்களில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும்; நிலத்தடி நீா் பாதுகாக்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments