நெல்லை ரயில் நிலையத்தில் 6 ஆவது நடைமேடை ஜூலையில் திறப்பு? அதிகாரிகள் விளக்கம்
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் 6ஆவது நடைமேடை ஜூலை மாதம் திறக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் 6ஆவது நடைமேடை ஜூலை மாதம் திறக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தின் கீழ் உள்ள ரயில் நிலையங்களில், அதிக வருவாய் ஈட்டும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் 5 நடைமேடைகளுடன் இயங்கி வருகிறது. இங்கு ரயில்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக புதிதாக நடைமேடை அமைக்க தீா்மானிக்கப்பட்டது.
இதற்காக மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சுமாா் ரூ.270 கோடி மதிப்பில் புதிதாக 6 ஆவது நடைமேடை அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 75 சதவீதத்துக்கும் மேல் பணிகள் நிறைவடைந்துள்ளன.
Advertisement
Advertisement
இந்நிலையில் ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் துணை பொது மேலாளா்கள் சிவ பிரகாசம், அன்வா் பாஷா, உதவி பொது மேலாளா் பெருமாள் ஆகியோா் அடங்கிய ரயில்வே அதிகாரிகள் குழுவினா் 6ஆவது நடைமேடை பணிகளை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீா்வசதி, கழிவறைகள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டனா். பின்னா் அந்த நடைமேடையில் புதிதாக தண்டவாளம் அமைக்கப்பட்டு பழைய தண்டவாளப் பாதையுடன் அவற்றை இணைக்கும் பணி தொடங்கி நடைபெறவுள்ளதால் திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை, திருச்செந்தூா் ரயில் இயக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்து நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா். தொடா்ந்து ஜூலை மாதத்திற்குள் 6-ஆவது நடைமேடை பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.