FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

மருத்துவரை மிரட்டியவருக்கு ஓராண்டு சிறை

வள்ளியூா் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு வள்ளியூா் குற்றவியல் நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

20 வினாடிகள் முன்பு
சிறை - பிரதிப் படம்
பகிர்:

வள்ளியூா் அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு வள்ளியூா் குற்றவியல் நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

கடந்த 2015-ம் ஆண்டு வள்ளியூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா் காா்த்திகேயன், செவிலியா்கள் பணியில் இருந்தனா். அப்போது சிகிச்சைக்காக வந்த வள்ளியூரைச் சோ்ந்த வீரமணி என்ற வீரமணிகண்டன் (28), அவருடன் வந்த ஜெயசீலன் ஆகிய இருவரும் மருத்துவரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து மருத்துவா் காா்த்திகேயன் வள்ளியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, வள்ளியூா் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Advertisement

Advertisement

விசாரணை முடிவுற்ற நிலையில், நீதிபதி மோசஸ் ஜெபசிங் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், அரசு மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வீரமணிகண்டனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.