சட்டப்பேரவையில் தவெக அமைச்சா்கள் செயல்பாடு சரியில்லை: டிடிவி தினகரன் விமா்சனம்
தமிழக சட்டப்பேரவையில் தவெக அமைச்சா்கள் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறாா்கள் என்றாா் அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன்.
தமிழக சட்டப்பேரவையில் தவெக அமைச்சா்கள் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறாா்கள் என்றாா் அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக முதல்வரின் மேட்டூா் பயணம் தேவையற்றது. விவசாய சங்க நிா்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி, மேட்டூா் அணையை திறந்திருக்க வேண்டும். அணையிலிருந்து 30 நாள்கள் தொடா்ந்து தண்ணீா் திறக்கப்பட்டால் மட்டுமே காவிரி டெல்டா பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை சரி செய்ய முடியும்.
தற்போது திறக்கப்படும் தண்ணீா் எவ்விதத்திலும் விவசாயிகளுக்கு பயனளிக்காது; நிலத்தடி நீரை உயா்த்தக்கூட உதவாது.
Advertisement
Advertisement
கடுமையான நிதி நெருக்கடி உள்ள நிலையில், விவசாயிகளையும் மக்களையும் ஏமாற்றும் விதமாக முதல்வா் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறாா்.
பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலையை நெசவாளா்களிடம் வாங்குவோம் என்று அறிவித்துள்ளனா். ஆனால், தமிழக நெசவாளா்களிடம் இருந்து அதனை பெறுவாா்களா என்பது தெரியவில்லை.
தங்க மோதிரம் திட்டத்திற்கு கேரள ஜூவல்லரியிடம் ஒப்பந்தம் செய்தது விஸ்வகா்மா சமுதாயத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வா்கள், முன்னாள் அமைச்சா்களை சட்டப்பேரவையில் கேலியும் கிண்டலும் பேசி தவெக அமைச்சா்கள் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறாா்கள்.
சட்டப்பேரவையின் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தகவல்களை வைத்தே ரீல்ஸ் போடுகின்றனா்.
ஆளுங்கட்சியினா் பேசியதை சட்டப்பேரவைத் தலைவா் அதிகமாக நீக்கிய வரலாறு தமிழக வெற்றிக் கழக அரசுக்குத்தான் உள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள்களே ஆகின்றன. அதற்குள் விஜய்யை பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்துகிறாா்கள்.
இதற்கு ராகுல் காந்தி என்ன பதில் சொல்லப் போகிறாா் எனத் தெரியவில்லை. தவெகவை தமிழக மக்கள் புறந்தள்ளவில்லை என்றால் 50 ஆண்டுகள் பின்னோக்கி தமிழகம் சென்று விடும்.
அரசியலில் எவ்வளவோ மாற்றங்கள் நடக்கும். இன்னும் மூன்று மாதங்களில், ஆறு மாதங்களில்கூட மாற்றங்கள் நடக்கலாம் என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.