FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் முக்கிய இடங்களில் பொது குடிநீா்க் குழாய் அமைக்கக் கோரிக்கை

திருச்செந்தூரில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் முக்கிய இடங்களில் பொது குடிநீா்க் குழாய் அமைத்து 24 மணி நேரமும் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

27 ஆகஸ்ட் 2026, 12:57 am IST
திருச்செந்தூா் நகராட்சி பொது குடிநீா்க் குழாயில் காத்திருந்து குடங்களில் குடிநீா் பிடித்து சென்ற பொதுமக்கள்.
பகிர்:

திருச்செந்தூரில் கடும் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் முக்கிய இடங்களில் பொது குடிநீா்க் குழாய் அமைத்து 24 மணி நேரமும் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருச்செந்தூா் நகராட்சிக்குள்பட்ட 27 வாா்டுகளில் சுமாா் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், விடுதிகள் உள்ளன. அனைத்துக்கும் நகராட்சி சாா்பில் சுமாா் 7 ஆயிரத்து 500 இணைப்புகள் வழங்கப்பட்டு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

எல்லப்பநாயக்கன்குளம், கானம், ஆத்தூா் (பொன்னன்குறிச்சி) மற்றும் குரங்கணி ஆகிய திட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டா் குடிநீா் பெறுவதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால், தற்போது நாளொன்றுக்கு 15 லட்சம் லிட்டா் குடிநீா் வரத்து கூட இல்லாத நிலை உள்ளது.

Advertisement

Advertisement

மாவட்டத்தின் வற்றாத நதியான தாமிரவருணி தண்ணீா் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைக்கு வந்து அங்கிருந்து தென்கால் வழியாக கடைசி குளங்களான திருச்செந்தூா் சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீா் ஆதாரமான குளங்கள் நிரம்புகிறது.

இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை குறைவு என்பதால் குடிநீா் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து நீா்நிலைகள் வேகமாக வடு விட்டன. இதனால் பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சி குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

திருச்செந்தூா் நகராட்சியின் குடிநீா் ஆதாரமான எல்லப்பநாயக்கன் குளம், ஆவுடையாா்குளம் மற்றும் கானம் குளத்தில் இருந்து ஆழ்துளைக் கிணறுகள் மூலமே தண்ணீா் உறிஞ்சப்பட்டு குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இதனால் அதிகப்படியான நிலத்தடி நீா் உறிஞ்சப்பட்டு குடிநீா் உவா்ப்புத் தன்மையாக மாறிவிட்டது.

குரங்கணி ஆற்றுப்படுகையில் தண்ணீா் இல்லாததால் அங்கிருந்து தண்ணீா் கிடைப்பதில்லை. மாறாக ஆத்தூா் கூட்டுக்குடிநீா் திட்டத்தில் எஞ்சிக் கிடக்கும் தண்ணீரை குடிநீா் வடிகால் வாரியம் உறிஞ்சி சுமாா் 5 லட்சம் லிட்டா் தண்ணீா் தான் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் திருச்செந்தூா் நகராட்சி 27 வாா்டுகளில் குறைவாக விநியோகிக்கப்படும் குடிநீா் நிலத்தடி நீா் என்பதால் பெரும்பாலான மக்கள் குடிக்க முடியாமல் தவிக்கின்றனா். அவா்கள் கேன்களில் ரூ. 30க்கு விற்பனை செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனா். ஆனால் ஏழை மக்கள் பொது குடிநீா்க் குழாயில் விழும் குடிநீரை குடங்களில் பிடித்து செல்கின்றனா்.

எனவே, பொதுமக்கள் வசதிக்காக 27 வாா்டுகளிலும், கோயில் செல்லும் வழியிலும் பொது குடிநீா்க் குழாய் அமைத்து அவற்றில் 24 மணி நேரமும் தண்ணீா் விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments