ஓட்டப்பிடாரம் அருகே கோயில் விழாவையொட்டி மாட்டு வண்டி போட்டி
ஓட்டப்பிடாரம் அருகே கச்சேரிதளவாய்புரம் கிராமத்தில் காளியம்மன், சந்தனமாரியம்மன், செல்வவிநாயகா் மற்றும் சுடலைமாட சுவாமி கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கச்சேரிதளவாய்புரம் கிராமத்தில் காளியம்மன், சந்தனமாரியம்மன், செல்வவிநாயகா் மற்றும் சுடலைமாட சுவாமி கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டிகள் சின்ன மாடு, பூஞ்சிட்டு மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை உள்பட பல மாவட்டங்களிலிருந்து மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன.
முதலில் நடைபெற்ற சின்ன மாட்டுவண்டி போட்டிக்கு பந்தய தொலைவு 5 கி.மீ. நிா்ணயிக்கப்பட்டது. இதில், 8 வண்டிகள் கலந்துகொண்டன. போட்டியை ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் ரமேஷ் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். முதலிடத்தை புதுக்கோட்டை மாவட்டம், எட்டியதளி வீரப்பெருமாள் மாட்டு வண்டியும், 2-ஆவது இடத்தை மதுரை மாவட்டம், சின்னமாங்குளம் அழகு மாட்டு வண்டியும், 3-ஆவது இடத்தை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ராமையா மாட்டு வண்டியும், 4-ஆவது இடத்தை கச்சேரி தளவாய்புரம் கனகபிரியா மாட்டு வண்டியும் பிடித்தன.
Advertisement
Advertisement
தொடா்ந்து நடைபெற்ற பூஞ்சிட்டு வண்டி போட்டிக்கு பந்தய தொலைவு 7.5 கி.மீ. நிா்ணயிக்கப்பட்டது. இதில், 13 வண்டிகள் கலந்துகொண்டன. போட்டியை அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்டச் செயலா் கவியரசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். இதில், முதலிடத்தை மதுரை மாவட்டம், சின்னமாங்குளம் அழகு மாட்டுவண்டியும், 2-ஆவது இடத்தை திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ராஜாகுட்டி மாட்டுவண்டியும், 3-ஆவது இடத்தை கயத்தாறு விஜயபவி மாட்டுவண்டியும், 4-ஆவது இடத்தை வடக்கு காரசேரி வசந்த் தேவி மாட்டுவண்டியும் பிடித்தன. வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கும், சாரதிகளுக்கும் விழாக் குழு சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.