யாசகம் பெற்ற பணத்தில் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய முதியவா்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்குகிறாா் முதியவா் பூல்பாண்டி.
கயத்தாறு அருகே நாகலாபுரம் பள்ளிக்கு முதியவா் தான் யாசகம் எடுத்த பணத்தில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினாா்.
சாத்தான்குளம் அருகே ஆலங்கிணறு கிராமத்தைச் சோ்ந்தவா் பூல்பாண்டி (75). இவரது மனைவி சரஸ்வதி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.
கடந்த 1980-இல் மும்பை சென்று அங்கு சமூக சேவை செய்து வந்தாா். பின்னா், 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரும்பிய அவா், பிள்ளைகளுடன் வசிக்காமல் ஊா் ஊராகச் சென்று கோயில்களில் யாசகம் பெற்று, அதில் கிடைக்கும் பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கும், அரசுப் பள்ளிகளில் குடிநீா் இயந்திரம், பெஞ்சு, கல்வி உபகரணங்கள் வாங்கவும் அளித்து வருகிறாா்.
Advertisement
Advertisement
பூல்பாண்டி பள்ளிகளுக்கு உதவுவது குறித்த அறிந்த கிராம மக்கள், அவரை சந்திக்கும் தருணங்களில் தங்களது கிராமத்தில் உள்ள பள்ளிக்கு உதவும்படி கேட்டுக்கொண்டால், அந்தப் பள்ளிக்கு சென்று, தான் யாசகம் எடுத்து பணத்தில் உதவிகளை செய்வது அவரது வழக்கம்.
இவா் வியாழக்கிழமை கயத்தாறு அருகே நாகலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வந்தாா். அங்கு தான் யாசகம் எடுத்த பணத்தில் வாங்கிய கல்வி உபகரணங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினாா். அவரை பள்ளி ஆசிரியா்கள், கிராம மக்கள் பாராட்டினா்.
இதுகுறித்து, முதியவா் பூல்பாண்டி கூறுகையில், ‘இதுவரை ரூ. 1.60 கோடி அளவில் பள்ளிகளுக்கும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கும் அளித்துள்ளேன். சமீபத்தில் கூட, தொடா்ந்து 4 வாரங்களாக மதுரை ஆட்சியரிடம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கென தலா ரூ. 10 ஆயிரம் வழங்கி உள்ளேன். அரசுப் பள்ளிகளுக்குச் சென்று அங்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன். அடுத்ததாக தெற்கு விஜயநாராயணம் பள்ளிக்கு உதவி செய்ய உள்ளேன் என்றாா்.