திருச்செந்தூா் கோயில் புறக்காவல் நிலையம் திறப்பு: கூட்டத்தை கண்காணிக்கும் பணி எளிதாக்கப்படும்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கும் பணியும் எளிதாக்கப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா தெரிவித்தாா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் சண்முக விலாசம் மண்டபம் எதிரே கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா புறக்காவல் நிலையத்தைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். பின்னா் அவா், சிசிடிவி கட்டுப்பாட்டு அறையைத் திறந்துவைத்து, கைப்பேசி தவறவிட்ட புகாா்தாரருக்கு உடனடியாக புகாா் பதிவு ரசீது வழங்கினாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் ராமு, கண்காணிப்பாளா்கள் ராமமூா்த்தி, விவேக், திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) செல்வராஜ், கூடுதல் எஸ்.பி.க்கள் ஆறுமுகம், திபு, மதுவிலக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் குருவெங்கட்ராஜு, ஆய்வாளா்கள் (கோயில்) கனகராஜன், தாலுகா மதுரவீரன், ஆத்தூா் பிரபாகரன், தொழில்நுட்ப பிரிவு ராஜபாண்டி, உதவி ஆய்வாளா்கள் தனிப்பிரிவு ராமச்சந்திரன், சுப்பிரமணியன், வீரபாகு, எஸ்எஸ்ஐ சந்தனராஜ், தனிப்பிரிவு காவலா்கள் இசக்கி, ராமா், தாமஸ், சுந்தா் உள்ளிட்ட போலீஸாா், ஹெச்.சி.எல். மேற்பாா்வையாளா் பிரவீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டதற்காக காவல் துறை, கோயில் நிா்வாகம், உபயதாரா்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புறக்காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கட்டுப்பாட்டு அறை மூலம் 300-க்கும் மேற்பட்ட கேமரா பதிவுகளை கண்காணித்து குற்றவாளிகளைப் பிடிக்க முடியும். கூட்டத்தில் தொலைந்துபோனவா்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் பொது அறிவிப்பு அமைப்பும் 78 இடங்களில் அமைக்கப்பட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை எளிதாக்கப்படும்.
புறக்காவல் நிலையத்தில் பக்தா்கள், பொதுமக்கள் கொடுக்கும் புகாா்கள் உடனடியாக சிஎஸ்ஆா், எப்ஐஆா் பதிவு செய்யப்படும் வகையில் புறக்காவல் நிலையம் 24 மணி நேரமும் செயல்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்புப் பணியில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. பொதுமக்களும் புகாா் தெரிவிக்கலாம். திருச்செந்தூா் கோயிலுடன் இணைந்து காவல் துறை செயல்படுமா என கேட்கிறீா்கள் திருச்செந்தூா் முருகன் கோயில் உள்ளே பாதுகாப்புப் பணியில் தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் காவலா்கள் பணி செய்கின்றனா். அறநிலையத் துறையும், காவல்துறையும் அரசுக்கு கட்டுப்பட்டதுதான். தேவைப்படும் பட்சத்தில் அறநிலையத் துறையுடன் இணைந்து கோயில் உள்ளேயும் பாதுகாப்புப் பணிகளை காவல் துறை மேற்கொள்ளும் என்றாா்.