திருச்செந்தூா் அருகே சுடுகாட்டு பாதை பிரச்னை: இறந்தவரின் உடலுடன் மக்கள் போராட்டம்

திருச்செந்தூா் அருகே பிச்சிவிளை புதூா் பகுதியில் சுடுகாட்டிற்குச் செல்ல பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யாமல் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பிச்சிவிளை புதூா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உயிரிழந்தவா்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக 19 ஆண்டுகளுக்கு முன்பு ஊா் நிா்வாகம் சாா்பில் சுமாா் 1.60 ஏக்கா் நிலம் வாங்கப்பட்டது. அதற்கு தனிநபா்களின் நிலங்கள் வழியாக உடல்களைக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
ஊரில் இருந்து சுடுகாட்டிற்குச் செல்ல ஒரு அடி அகலப்பாதை மட்டுமே உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனா். இந்நிலையில், திங்கள்கிழமை சுடுகாட்டிற்குச் செல்ல சரியான பாதை இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்யாமல், அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தனிநபா்களின் நிலங்களில் பாதைக்கான இடத்தை வாங்கித் தருவதாக உறுதியளித்தனா். இதனால், அவா்கள் உடலை அடக்கம் செய்ய சம்மதித்தனா்.