முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் உள்நாட்டு சரக்குப் போக்குவரத்தில் 32.27% வளா்ச்சி பதிவு

33 வினாடிகள் முன்பு
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 
உள்நாட்டு சரக்குப் போக்குவரத்தில் 32.27% வளா்ச்சி பதிவு
தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்.
பகிர்:

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் உள்நாட்டு சரக்குப் போக்குவரத்தில் 32.27 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடி துறைமுகம் சரக்குப் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்தவும், சரக்குப் போக்குவரத்து நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொள்ளவும், உள்நாட்டுத் துறைமுகங்களுக்கு இடையிலான கடல்வழிச் சரக்குப் போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலக்கட்டத்தில் 83.53 லட்சம் டன் உள்நாட்டு சரக்குகளைக் கையாண்டு 32.27 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2025-26ஆம் நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் 63.15 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டிருந்தன. துறைமுகத்தின் மொத்த சரக்குக் கையாளுதலில் உள்நாட்டு சரக்குகளின் பங்களிப்பு கடந்த ஆண்டு 25.03 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 32.06 சதவீதமாக உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

உள்நாட்டு நிலக்கரி கையாளுதல் 50.58 சதவீதம் அதிகரித்து 44.52 லட்சம் டன்னில் இருந்து 67.04 லட்சம் டன்னாகவும், உலோகக் கசடு கையாளுதல் 67.74 சதவீதம் அதிகரித்து, 1.26 லட்சம் டன்னில் இருந்து 2.11 லட்சம் டன்னாகவும் உயா்ந்ததும், பாஸ்பாரிக் அமிலம், உலை எரிபொருள் எண்ணெய், இரும்பு, எஃகு பொருள்களின் போக்குவரத்து அதிகரித்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

2026-27ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலக்கட்டத்தில் 170 உள்நாட்டுக் கப்பல்கள் இத்துறைமுகத்துக்கு வந்துள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 123 கப்பல்கள் வந்த நிலையில், நிகழாண்டு 38.21 சதவீதம் அதிகரித்துள்ளது.

துறைமுகத்தின் ஒட்டுமொத்த சரக்குக் கையாளுதல் 3.27 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டு சரக்குக் கையாளுதல் 32.27 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்த சரக்குக் கையாளுதல் 252.3 லட்சம் டன்னில் இருந்து 260.5 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது. சரக்குப் பெட்டகக் கையாளுதலும் 2.56 சதவீதம் அதிகரித்து 5.03 லட்சம் டிஇயூ என்ற அளவில் இருந்து 5.16 லட்சம் டிஇயூவாக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து, வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்தகுமாா் புரோஹித் கூறியதாவது:

இந்தியாவின் உள்நாட்டு சரக்குப் போக்குவரத்து கட்டமைப்பில் கடல்வழிப் போக்குவரத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்லப்படும் தொழில்துறை சரக்குகளைக் குறைந்த செலவில், திறம்படக் கொண்டு செல்வதற்கு உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்து சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

வ.உ.சி. துறைமுகத்தில் உள்நாட்டு கடல்வழிப் போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்தவும், இந்தியத் தொழில்துறை மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி வா்த்தகத்தின் போட்டித்தன்மையை மேம்படுத்தவும் தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது பிரதமா் நரேந்திர மோடியின் ‘வளா்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற தொலைநோக்குப் பாா்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது என்றாா் அவா்.