முகப்பு
தூத்துக்குடி

அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்த நிறுவனத்துக்கு சீல்

தூத்துக்குடியில் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி, குடிநீராக சுத்திகரித்து வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்த தனியாா் நிறுவனத்தை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

26 நவம்பர் 2026, 3:37 am
அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்த நிறுவனத்துக்கு சீல்
நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்த நிறுவனத்துக்கு பூட்டி சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.
பகிர்:

தூத்துக்குடியில் அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி, குடிநீராக சுத்திகரித்து வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்த தனியாா் நிறுவனத்தை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

தூத்துக்குடி மாநகராட்சி, மில்லா்புரம் பகுதியில் தனியாா் நிறுவனம் ஒன்று அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி, வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதாக பொதுமக்களிடமிருந்து மாநகராட்சிக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, மாநகராட்சி அலுவலா்கள் அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்தனா். அப்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிய அனுமதி பெறாமலும், குடியிருப்புப் பயன்பாட்டுக்கான இடத்தை வணிக நோக்கில் பயன்படுத்தியும் இயங்கி வந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

மேலும், மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் அனுமதியும் பெறாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி, குடிநீராக சுத்திகரித்து விற்பனை செய்து வந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை சம்பந்தப்பட்ட நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனா்.

மாநகராட்சிப் பகுதிகளில் இதுபோன்று உரிய அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி வணிக நோக்கில் பயன்படுத்தும் நிறுவனங்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.