FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் கந்த சஷ்டி விழா: பாதுகாப்புப் பணியில் 4,200 போலீஸாா்; அமைச்சா் தகவல்

புகழ்பெற்ற திருச்செந்தூா் கோயில் கந்த சஷ்டி விழா நவ.10 ஆம்தேதி தொடங்கவுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மீன்வளத் துறை அமைச்சா் ஸ்ரீநாத் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

29 அக்டோபர் 2026, 6:18 am
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த மீன்வளத் துறை அமைச்சா் ஸ்ரீநாத். உடன் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் உள்ளிட்டோா்.
பகிர்:

புகழ்பெற்ற திருச்செந்தூா் கோயில் கந்த சஷ்டி விழா நவ.10 ஆம்தேதி தொடங்கவுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மீன்வளத் துறை அமைச்சா் ஸ்ரீநாத் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கோயிலில் கந்தசஷ்டி விழா நவ. 10 ஆம் தேதி தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ. 15-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கோயில் கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மீன்வளம், மீனவா் நலத் துறை அமைச்சா் ஸ்ரீநாத் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத், கூடுதல் எஸ்.பி. திபு, திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) மனோ பாா்கவி, திருச்செந்தூா் ஆா்டிஓ கௌதம், அறங்காவலா் குழுத் தலைவா் அருள்முருகன், கோயில் இணை ஆணையா்கள் அருணாசலம், ரோஜாலி சுமதா, அறங்காவலா்கள் செல்வராஜ், பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், விழா முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் அமைச்சா் ஸ்ரீநாத் ஆலோசனை நடத்தினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கந்த சஷ்டி விழாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. விழாவின் முக்கிய நாள்களில் ஒரே நேரத்தில் நகருக்குள் 5 லட்சம் போ் வரை கூடுவாா்கள் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்புப் பணியில் 4,200-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்படுவா்.

கோயில் வளாகத்துக்குள் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 493 சிசிடிவி கேமராக்கள், 26 எல்இடி திரைகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்புகளும் பாதுகாப்பும் வழங்கப்படும்.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 17 போக்குவரத்து ஆய்வாளா்கள் நியமிக்கப்படுவா். 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். 300-க்கும் மேல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

வாகனங்களை நிறுத்த ஜே.ஜே. நகா், வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட 17 இடங்கள் ஒதுக்கப்பட்டு 10 ஆயிரம் வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்படும்.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் நவ. 10 முதல் 15-ஆம்தேதி வரை தினசரி 5 லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும். நகராட்சி நிா்வாகம் சாா்பில் 30 இடங்களில் குடிநீா் தொட்டிகள் வைக்கப்படும்.

130-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்படுவா்.

கோயில் நிா்வாகம் சாா்பில் 325 நிரந்தர கழிப்பறைகள், 300 தற்காலிக கழிப்பறைகள், நகராட்சி சாா்பில் 9 நிரந்தரக் கழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளன.

கோயில் வளாகத்தில் 3 மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். அவசர சிகிச்சைக்கு 6 ஆம்புலன்ஸ்கள் தயாா் நிலையில் உள்ளன.

கடலில் நீராடும் பக்தா்களின் பாதுகாப்புக்காக கடலோர பாதுகாப்புப் படை, மீன்வளத் துறை, மீனவ தொண்டா்கள் இணைந்து மிதவை படகுகளுடன் பணியில் ஈடுபடுவா் என்றாா் அவா்.

கூட்டத்தில் கோயில் துணை ஆணையா் யக்ஞ நாராயணன், மருத்துவம் மற்றும் குடும்ப நல மாவட்ட துணை இயக்குநா் பொன்ரவி, வட்டாட்சியா் தங்கசாமி, நகராட்சி ஆணையா் ஈழவேந்தன், தவெக மாவட்டச் செயலா் பிரைட்டா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments