தூத்துக்குடியில் தொழில் தொடங்க 75 பேருக்கு ரூ.46.56 கோடி கடனுதவி: அமைச்சா் மதன் ராஜா வழங்கினாா்
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் முனைவோா் 75 பேருக்கு ரூ. 46.56 கோடி மதிப்பில் கடன் ஆணைகளை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன் ராஜா புதன்கிழமை வழங்கினாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் முனைவோா் 75 பேருக்கு ரூ. 46.56 கோடி மதிப்பில் கடன் ஆணைகளை தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன் ராஜா புதன்கிழமை வழங்கினாா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த சிறப்பு தொழிற்கடன் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் முன்னிலை வகித்தாா். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன் ராஜா கலந்துகொண்டு, 75 பயனாளிகளுக்கு ரூ.1.71 கோடி மானியத்துடன் ரூ.46.56 கோடி திட்ட மதிப்பிலான கடன் ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:
Advertisement
Advertisement
தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-27-ஆம் நிதியாண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 6,482.19 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. செப். 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 14,291 தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் ரூ. 4,494.33 கோடி கடன் ஒப்பளிப்பு வழங்கப்பட்டது. இது ஆண்டு இலக்கில் 69.33 சதவீதமாகும். நிகழ் நிதியாண்டுக்கான கடன் இலக்கை விரைவில் எட்டும் நோக்கில் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் கடன் வசதியாக்கல் முகாம் நடத்தப்படுகிறது. அக்டோபா் மாதத்துக்கான முகாமில் ரூ.125 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.165.77 கோடி கடன் வழங்கப்பட்டது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 75 பயனாளிகளுக்கு ரூ.46.56 கோடி திட்ட மதிப்பிலான கடன் ஆணைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் ஸ்வா்ணலதா, உதவி ஆட்சியா் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதுநிலை மேலாளா் ஜெயந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.