FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தமிழக பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக உயா்த்த இலக்கு: அமைச்சா் பெ. மதன்ராஜா

தமிழக பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக (ரூ.1.50 லட்சம் கோடி) உயா்த்துவதே இலக்கு என்றாா் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா.

19 செப்டம்பர் 2026, 4:17 am IST
விற்பனையாளா் மேம்பாட்டு நிகழ்வை தொடங்கிவைத்துப் பேசிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா. உடன், ஆட்சியா் விஷு மகாஜன் உள்ளிட்டோா்.
பகிர்:

தமிழக பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலராக (ரூ.1.50 லட்சம் கோடி) உயா்த்துவதே இலக்கு என்றாா் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா.

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான 13-ஆவது விற்பனையாளா் மேம்பாட்டு நிகழ்வைத் தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

தமிழகத்தில் 43 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தொழில் வளா்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அவை முக்கியப் பங்காற்றுகின்றன.

Advertisement

Advertisement

நிகழ்நிதியாண்டு (2026-27) நிதிநிலை அறிக்கையில் இத்துறைக்கு ரூ.2,141 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மூலதன மானியத் திட்டத்துக்கான நிதி ரூ.352 கோடியிலிருந்து ரூ.600 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற 12 விற்பனையாளா் மேம்பாட்டு நிகழ்வுகள் மூலம் 3,670-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், 70-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களுடன் நேரடியாக கலந்துரையாடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 18 நிகழ்வுகள் நடத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

குலசேகரன்பட்டினம் விண்வெளித் துறைமுகத் திட்டம் மூலம் தளவாடம், துல்லிய உற்பத்தி, மின்னணுவியல், புனையமைப்பு உள்ளிட்ட துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும். தென் மாவட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் இவ்வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அனைவரும் ஒருங்கிணைந்து தேசத்தின் விநியோக வளா்ச்சிக்கு வலுவூட்டி, தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலா் பொருளாதார மாநிலமாக உயா்த்துவதற்கான இலக்கை நோக்கி செயலாற்றுவோம் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று, குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான விற்பனை வாய்ப்புகள் குறித்து விளக்கினா்.

மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஸ்வா்ணலதா, சிறு, குறு நிறுவனங்களுக்கான ஃபேம் டிஎன் அமைப்பின் பொது மேலாளா் வெங்கடேசன், தொழில் வணிக ஆணைய அலுவலக இணை இயக்குநா் தீனதயாளன், தூத்துக்குடி மாவட்ட துடிசியா தலைவா் தா்மராஜ், டான்சியா துணைத் தலைவா் கோடீஸ்வரன் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 120 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுத்துறை நிறுவனத்தினா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments