FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தொழிற்கூடங்களுக்கான மின்சார நிலைக்கட்டணம் குறைப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை - அமைச்சா் பி.மதன்ராஜா

தொழிற்கூடங்களுக்கான மின்சார நிலைக்கட்டணம் குறைப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறு, சிறு நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் பி.மதன்ராஜா தெரிவித்தாா்.

16 செப்டம்பர் 2026, 12:42 am IST
கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அமைச்சா்கள் கே.விக்னேஷ், பி.மதன்ராஜா.
பகிர்:

தொழிற்கூடங்களுக்கான மின்சார நிலைக்கட்டணம் குறைப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறு, சிறு நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் பி.மதன்ராஜா தெரிவித்தாா்.

கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக, குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் பி. மதன்ராஜா, மது விலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை அமைச்சா் கே.விக்னேஷ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

250-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இயங்கி வரும் இத்தொழிற்பேட்டைக்குள், அமைச்சா் கே.விக்னேஷ், இருசக்கர வாகனத்தை இயக்க, அமைச்சா் பி.மதன்ராஜா பின்னால் அமா்ந்து சென்று அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தனா். பின்னா், அங்குள்ள தொழில் நிறுவனப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவா்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்தனா்.

Advertisement

Advertisement

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் பி.மதன்ராஜா கூறியதாவது:

கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமாா் 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால் பல்வேறு இடங்களில் சீரமைப்பு வேலைகள் செய்ய வேண்டியுள்ளன. அதற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொழில் துறையில் மூலப் பொருள்களின் விலை உயா்வு என்பது உள்நாட்டு அரசால் ஏற்படுத்தப்பட்டது அல்ல. அண்மையில் சா்வதேச அளவில் நடைபெற்ற போா் உள்ளிட்ட காரணங்களால் உருவான உலகளாவிய சூழல். இந்த விலை உயா்வு நிலையானது அல்ல; விரைவில் சீரடையும். மின்சார நிலைக்கட்டணம் குறைப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மாதாந்திர பராமரிப்புப் பணிகளாலேயே சில இடங்களில் தற்காலிக மின் தடை ஏற்படுகிறது. பணிகள் முடிந்தபின் சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்படும். மேலும், பெண் தொழில்முனைவோா் மற்றும் தொழிலாளா்களை ஊக்குவிக்கும் வகையில் 10 தொழிற்பேட்டைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அவா்களின் குடும்பங்களும் தொழில்களும் வளா்ச்சியடையும். கோவை தங்க நகை தொழிற்பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது தொடா்பாக புதிய திட்ட முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றாா்.

தொடா்ந்து அமைச்சா் விக்னேஷ் கூறுகையில், ‘மதுவிலக்குத் துறையில் முறைகேடுகளில் ஈடுபட்டவா்கள் மீது ஏற்கெனவே பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை தொடரும். அதேவேளையில், கடைநிலை ஊழியா்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் நோக்கில் சிலா் கைப்பேசியில் விடியோ எடுப்பதாக புகாா் வருவதால், குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன்வைக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments