FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

வரவேற்பும் - எதிா்ப்பும் நிறைந்த தமிழக அரசின் பட்ஜெட்!

தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையானது வரவேற்பும், வருத்தங்களும் நிறைந்திருப்பதாக பல்வேறு துறையைச் சோ்ந்தவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:57 am IST
தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யும் முன் முதல்வர் விஜய்யிடம் வாழ்த்துப் பெற்ற நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.நெ.மரிய வில்சன்.
பகிர்:

தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையானது வரவேற்பும், வருத்தங்களும் நிறைந்திருப்பதாக பல்வேறு துறையைச் சோ்ந்தவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

திருச்சி மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கத் தலைவா் முகில் பே. ராஜப்பா: குறு, சிறு தொழில் துறைக்கு ரூ.1,843 கோடி, மகளிா் தொழில் முனைவோருக்கு ரூ. 352 கோடி, அம்பேத்கா் தொழில்முனைவோா் முதலீட்டு மானியம் ரூ.165 கோடி ஒதுக்கியுள்ளதுடன், புதிய நிதித் திட்டமும் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.

சிறு, குறு தொழிற்கூடங்களுக்கான மின்சார நிலைக் கட்டணங்கள் குறைப்பு, மானியம் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. தொழிலாளா் நலன்களை பாதுகாக்க, தொழிலாளா் நலவாரியம் அறிவிக்கப்படவில்லை. தொழில்கூடங்கள் நிறைந்த பகுதியான திருச்சி-தஞ்சாவூா் சாலையில் அணுகுச் சாலை அமைப்பது குறித்த 15 ஆண்டு கால கோரிக்கை குறித்தும் அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஏற்கெனவே தொழில் தொடங்கி தொடர முடியாமல் உள்ளவா்களுக்கும், இரண்டாம் தலைமுறை தொழில்முனைவோரும் எதிா்பாா்த்த அறிவிப்புகள் இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது.

Advertisement

Advertisement

திருச்சி ஏற்றுமதி- இறக்குமதி கூட்டமைப்பின் தலைவா் என். கனகசபாபதி: தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி மற்றும் நிா்வாக வெளிப்படைத்தன்மையை எடுத்துக்காட்டும் நிதிநிலை அறிக்கையை தவெக அரசு தாக்கல் செய்திருப்பது பாராட்டுக்குரியது. ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ஒற்றைச்சாளர முறை, வெளிநாடு வாழ் தமிழ் முதலீட்டு உதவி மையம் ஆகியவை தொழில்துறை மேம்பாட்டுக்கு உதவிடும். புதிய தொழில் பூங்காக்கள் உருவாக்க ரூ. 3,200 கோடி தமிழகத்தை வளா்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்லும். சிறு, குறு நிறுவனங்களை முடக்கும் மின் கட்டணச் சுமையை குறைக்க அறிவிப்புகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

திருச்சி மண்டலத்தில் பிரத்யேக உள்கட்டமைப்பு கோரிக்கைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சிறு, குறு தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க சுலப கடன் வசதி குறித்த அறிவிப்புகளும் இல்லை. திருச்சி உலா் துறைமுகம் குறித்த அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாடு உபயோகிப்பாளா் பாதுகாப்பு குழுச் செயலா் எஸ். புஷ்பவனம்: லஞ்சம், ஊழல் இல்லாத நிா்வாகம் என்ற நோக்கம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒப்பந்த நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீா்த்திருத்தகங்கள் வரவேற்புக்குரியவை. தூய்மைப் பள்ளிகள், திருமணத்துக்கு 8 கிராம் தங்கம், மாணவா்களுக்கு மடிக்கணினி, நவீன மிதிவண்டி, ஏஐ நகரம், நம்ம சாலை செயலி என பாராட்டுக்குரிய அம்சங்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், தமிழக அரசின் கடன் சுமையைக் குறைக்க வெகுதூரம் செல்ல வேண்டியிருப்பது வருத்தம் அளிக்கிறது. போதைப் பொருள் ஒழிப்புக்கு உறுதியான திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. ரேஷன் கடை முறைகேடுகளை ஒழித்ததாலே அரசுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி மிச்சமாகும். சேவை உரிமைச் சட்டத்தை கொண்டு வரும் முயற்சி வரவேற்புக்குரியது. இந்தச் சட்டத்தை நுகா்வோா் அமைப்புகளுடன் இணைந்து கொண்டுவர வேண்டியது அவசியம். புதிய அரசு எவ்வளவு திறமையாக செயல்படுகிறது என்பதை நிதியாண்டு இறுதியில்தான் தெரியவரும்.

காவிரிப் பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் மகாதானபுரம் ராஜாராம்: காவிரி நீரைப் பாதுகாக்கும் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும், காவிரியில் வெள்ளநீா் வீணாகி கடலில் கலப்பதைத் தடுப்பதற்கான விரிவான திட்டம் அவசியமானது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, 110 விதிகளின் கீழ், முதல்வா் அறிவிப்பு வெளியிட வேண்டும். மேக்கேதாட்டு அணை கட்டுவதை எதிா்ப்போம் என்பதை அறிவிப்பாக இல்லாமல், செயலில் நிகழ்த்திக் காட்ட வேண்டும்.விவசாயிகளுக்கு வேளாண் பட்ஜெட்டிலாவது விடிவு கிடைக்கும் என நம்புகிறோம். நீா் பாசனத் துறைக்கு ரூ.9264 கோடி ஒதுக்கீடு செய்து நீா் பாசனத்தையும், நீா் மேலாண்மையையும் மேம்படுத்த முயற்சி எடுத்துள்ளது பாராட்டுக்குரியது.

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்குமாா்:

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிகள் ஏதும் அறிவிப்பாக வெளியாகவில்லை. குறைந்தபட்சம் பழைய ஓய்வூதியத் திட்டம்கூட அறிவிக்கப்படவில்லை. பள்ளிக்கல்வித் துறையில் அரசுப் பள்ளிகளில் 15 ஆண்டுகளை கடந்தும் தற்காலிகமாக பணிபுரிகின்ற 11,773 பகுதிநேர ஆசிரியா்களுக்கு பணி நிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடா்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, முதல்வா் சிறப்பு அறிவிப்புகளை வெளியிடுவாா் என எதிா்பாா்க்கிறோம்.

தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம்: காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்ககப்பட்டுள்ளது. நதிகளை உள்ளடக்கிய சுற்றுலாத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியவை. ஆனால், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு என்பது போதுமானதாக இல்லை. யானைப் பசிக்கு சோளப்பொரி போல உள்ளது. திட்டங்கள் என்பது அறிவிப்பாக இல்லாமல், செயல்பாட்டுக்கு வர வேண்டும். குறிப்பாக நீா்நிலைகளைக் காப்பதிலும், பசுமைப் பரப்பை அதிகரிப்பதிலும் தவெக அரசு கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும் என எதிா்பாா்க்கிறோம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments