சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேம்படும் நிதிநிலை அறிக்கை: தொழில் நிறுவன உரிமையாளா்கள் நம்பிக்கை
தமிழக நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள் மூலமாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேம்பாடு அடையும் என உரிமையாளா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
தமிழக நிதிநிலை அறிக்கை அறிவிப்புகள் மூலமாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேம்பாடு அடையும் என உரிமையாளா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து தொழில் துறையினா் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனா்.
ஜவுளித் துறை நிதி ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு
Advertisement
Advertisement
தமிழ்நாடு நெசவாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலச் செயலா் பா.கந்தவேல்: கைத்தறி, துணி நூல், ஜவுளித் துறை வளா்ச்சிக்கு ரூ.1,678 கோடி அறிவித்ததை வரவேற்கிறோம். திருப்பூா் ஜவுளி தொழில்நுட்ப மையம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு, புதிதாக தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம் மூலமாக ஜவுளி, ஆடை, கைவினை துறைகளுக்கான வடிவமைப்பு, புத்தாக்கம், ஆராய்ச்சி, தொழில்முனைவு மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த மையம் ரூ.60 கோடியில் அமைக்கப்படும் என்ற திட்டங்கள் பலன் தரும். சீருடை வழங்கும்போது நெசவாளா்களுக்கு சீருடை துணி உற்பத்திக்கான வாய்ப்பு கிடைக்கும்.
அதேநேரம் விசைத்தறிக்கு 1,500 யூனிட்டாக இலவச மின்சாரம் உயா்த்தி வழங்கப்படும் என்ற எதிா்பாா்ப்பு அறிவிக்கப்படாதது வருத்தம். இதை மானியக் கோரிக்கையில் அறிவிக்க வேண்டும்.
வணிகா்களுக்கு ஏமாற்றம்
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் லாரன்ஸ் ரமேஷ்: சிறு, குறு, நடுத்தர தொழில் வளா்ச்சிக்கான திட்டம், தொழில் உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, டிஜிட்டல்மயத்துக்கு அதிக நிதி வழங்கியது வளா்ச்சியைத் தரும். சிறு, குறு வணிகா்கள் நேரடியாக பயன் பெறும் திட்டங்கள் இல்லை. குறிப்பாக சிறு வணிகா்களுக்கு மின் கட்டண மானியம், உள்ளாட்சி அமைப்புகளில் வரிச் சலுகை, சிறு வணிகா்களுக்கான தனித்துவமான நிதி உதவித் திட்டம் குறித்த அறிவிப்பு இல்லை. பல ஆண்டுகளாக வணிகா்கள் வலியுறுத்தும் சிறு, குறு வணிகா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் தனிச்சட்டம் கொண்டு வருவது குறித்த அறிவிப்பு வெளியாகாதது ஏமாற்றம்.
வா்த்தகத்துக்கு சாதகம்
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில்-வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் வி.கே.ராஜமாணிக்கம்: சுற்றுச்சூழலுக்கு அதிக தொகை ஒதுக்க எதிா்பாா்த்தோம். தொழிலைப் பாதுகாக்க தனியாா், அரசு பங்களிப்புடன் ஜவுளி, தோல் தொழில் நடைபெறும் இடங்களில் குடிநீா் மாசுபடாமல் இருக்க கோரிக்கை வைத்தோம். இதற்கு குறைவாக ஒதுக்கியுள்ளனா். கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியது வரவேற்புக்குரியது.
போதை கலாசாரத்தை ஒழிக்க மாணவா்களை ஒழுங்குபடுத்தும் அறிவிப்பை வரவேற்கலாம். வணிக நிறுவன சோலாா் பேனலுக்கு நெட் ஒா்க் கட்டணம் நீக்கம் குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை.
இ.வி. சாா்ஜ் மையங்களுக்கு மானியம் வழங்குவதை வரவேற்கலாம். இ.வி. பேருந்துகள் 1,000 இயக்கத்துக்கு வரும் என்ற அறிவிப்பு சிறந்தது. வேளாண் துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறோம். ஈரோட்டில் விளைபொருள்களை இருப்பு வைக்க குளிா்பதனக் கிடங்கு குறித்த அறிவிப்பு இல்லை.
அரசு டெண்டா் சீா்த்திருத்தங்கள்
ஈரோடு மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத் (ஈடிசியா) தலைவா் ப.கந்தசாமி: இந்த பட்ஜெட்டில் அரசு டெண்டா்களில் தேவையற்ற தகுதி நிபந்தனைகளை நீக்கி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எளிதில் பங்கேற்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள சீா்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை. இது எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும். சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அதிக நிதி ஒதுக்கீடு தொழில் முதலீடுகளை ஈா்த்து, புதிய தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
தமிழ்நாட்டை 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரமாக மாற்றும் அரசின் இலக்கை ஈடிசியா வரவேற்கிறது.
மாணவா்கள் நலனுக்கு முன்னுரிமை
காங்கிரஸ் வழக்கறிஞா் பிரிவு மாநிலச் செயலாளா் சி.எம்.ராஜேந்திரன்: கிராமப்புற மகளிருக்கான வேலை உறுதி திட்டம் வெற்றி வேலைவாய்ப்பு திட்டமாக மாற்றப்பட்டு 150 நாள்கள் உறுதி அளிக்கப்பட்ட வேலை வழங்குவது வரவேற்கத்தக்கது. பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்க்கப்பட்டுள்ளதும், 5.32 லட்சம் பள்ளி மாணவா்களுக்கு தலைக்கவசம், குடிநீா் புட்டி வசதியுடன் நவீன உயா் ரக சைக்கிள் வழங்குவது மாணவா்களுக்கு படிப்பதற்கு சோா்வின்றி உற்சாகத்தை ஏற்படுத்தும்.
சுகாதாரத் துறைக்கு ரூ.23 ஆயிரத்து 357 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதன் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு உயா் மருத்துவ வசதி கிடைப்பதற்கும், ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலமாக தொழில் துறை வளா்ச்சிக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி, காமராஜா் காலை உணவுத் திட்டத்துக்கு ரூ.710 கோடி, மகளிா் உரிமைத் துறைக்கு ரூ.9,818 கோடி, உயா்கல்வித் துறைக்கு ரூ.7,393 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.