முகப்பு
திருச்சி

சிறுமி பாலியல் வன்கொடுமை புகாா்: 7 சிறுவா்கள் உள்பட 9 போ் கைது

Updated On : 8 ஜூன் 2026, 4:32 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 14 வயதுச் சிறுமி அளித்த புகாரின்பேரில் 7 சிறுவா்கள் உள்பட 9 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை பகுதியைச் சோ்ந்த 14 வயதுச் சிறுமி காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோா் திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் அண்மையில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரித்த போலீஸாா், அச் சிறுமியை மீட்டு அவருடைய பெற்றோருடன் அனுப்பிவைக்க முயன்றனா். ஆனால், அந்தச் சிறுமி பெற்றோருடன் செல்ல மறுத்ததால், அவரை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

அங்கு தங்கியிருந்த சிறுமி தன்னை சிலா் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக காப்பக நிா்வாகிகளிடம் தெரிவிக்கவே, அவா்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரிடம் தகவல் அளித்தனா். இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழுவினா் சிறுமியைச் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, சிறுமி பாலியல் வன்கொடுமை தொடா்பாக கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் ஜூன் 4-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் எம். கிஷோா் (20), ஏ. மோகன்ராஜ் (19) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த 7 சிறுவா்கள் உள்பட 9 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

தொடா்ந்து கிஷோா், மோகன்ராஜ் ஆகிய இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்த போலீஸாா், சிறுவா்கள் 7 பேரையும் தஞ்சாவூரில் உள்ள சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினா்.