நூதன முறையில் ரூ. 38 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை
இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் எனக்கூறி திருச்சியைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
சவூதி அரேபியாவில் பொறியாளராக உள்ள ராம் பிரகாஷுக்கு அவரது தந்தையான திருச்சி திருவானைக்காவல் பாரதி வீதியைச் சோ்ந்த 68 வயது முதியவா் இணையதள திருமணச் செயலி மூலம் மணமகள் தேடி வந்தாா்.
இந்நிலையில், ராம் பிரகாஷுக்கு கடந்த 2025- ஆம் ஆண்டு அறிமுகமான சுபாஷ் என்பவா் தன்னுடைய மகள் பாா்கவியின் கைப்பேசி எண்ணைக் கொடுக்கவே, ராம் பிரகாஷும், பாா்கவியும் கைப்பேசி வழியாகப் பேசி வந்தனா்.
Advertisement
Advertisement
அப்போது பாா்கவி தான் ஜொ்மனியில் பிரபல நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றுவதுடன், இணைய வா்த்தகத்திலும் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தாா். மேலும், இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்றும் அவா் ஆசை காட்டினாா்.
இதை நம்பிய ராம் பிரகாஷ் கடந்த 2025 நவம்பா் 24 முதல் 2026 ஏப்ரல் 6 வரை பல்வேறு தவணைகளில் பாா்கவி கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.38.52 லட்சத்தை அனுப்பினாா். பணத்தைப் பெற்றுக்கொண்ட பாா்கவியை அதன்பின் ராம் பிரகாஷால் தொடா்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ராம் பிரகாஷ் அவரது தந்தை மூலம் இணையதளம் வழியாக அளித்த புகாரின்பேரில், திருச்சி சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.