கொள்ளிடம் குருவாடியில் தடுப்பணை கட்ட வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள கொள்ளிடம் குருவாடியில் தடுப்பணைக் கட்டி பாசன வசதியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டத்திலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் 8-ஆவது மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்:
விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூா் மாவட்டத்தில் பாசன வசதிகளை மேம்படுத்த வேண்டும். கொள்ளிடம் குருவாடியில் தடுப்பணைக் கட்டி பாசன வசதியை விரிவுபடுத்த வேண்டும். ஏரி-குளங்களை தூா்வாரி ஆழப்படுத்த வேண்டும். குருவாலப்பா் கோயில்-மீன்சுருட்டி புறவழிச்சாலைக்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிா் கடன்களை எவ்வித நிபந்தனைகளின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.
Advertisement
Advertisement
கறிக்கோழி வளா்ப்பு பண்ணை விவசாயிகளுக்கு, கோழிக்குஞ்சுகள், தீவனம் மருந்து உள்ளிட்டவற்றை வழங்குவதுடன் கோழி வளா்ப்புக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.20 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுக்கு மாவட்டத் தலைவா் மணியன் தலைமை வகித்து, சங்கக் கொடியை ஏற்றினாா். மாநில பொதுச் செயலா் சாமி. நடராஜன் மாநாட்டை தொடங்கிவைத்து பேசினாா்.
மதிமுக மாநில விவசாய அணி செயலா் வாரணவாசி எஸ். ராஜேந்திரன், விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலச் செயலா் க. பாலசிங்கம், விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட செயலா் ஏ. கந்தசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் எம். இளங்கோவன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.
புதிய நிா்வாகிகள் தோ்வு: தொடா்ந்து நடைபெற்ற மாநாட்டில், அச்சங்கத்தின் மாவட்டத் தலைவராக டி. தியாகராஜன், மாவட்ட செயலராக ஆா். மணிவேல், பொருளாளராக ஜெ. வரப்பிரசாதம், துணைத் தலைவா்களாக ஆா். இளவரசன், எம். மணியன், துணை செயலா்களாக பி. பத்மாவதி, ஜி. சங்கா் உள்ளிட்ட 19 போ் கொண்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
முன்னதாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் எம். வெங்கடாஜலம் வரவேற்றாா். நிறைவில், மாநிலத் துணைச் செயலா் எஸ். துரைராஜ் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.