FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

சன்னாவூரில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

சன்னாவூா் கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

51 வினாடிகள் முன்பு
சன்னாவூரில் புதன்கிழமை நடைபெற்ற கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாமில்,சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட 3 பசுக்களுக்கு பரிசுகளை வழங்கிய கால்நடை பராமரிப்புத் துறையினா்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், சன்னாவூா் கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ரகுபதி, உதவி இயக்குநா் முருகேசன் ஆகியோா் தலைமை வகித்து தொடங்கி வைத்தனா். கால்நடை உதவி மருத்துவா்கள் ராஜா, அருண் நேரு, செல்வி, ரேவதி, நோய் புலனாய்வு உதவி மருத்துவா் பிரகாஷ், ஆவின் கால்நடை மருத்துவா் செல்வகுமாா், மேற்பாா்வையாளா் கண்ணகி, கால்நடை ஆய்வாளா் முத்துகுமரன், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் நசிமா, அனிதா, பிரபாகரன் ஆகியோா் கொண்ட குழுவினா் கலந்துகொண்டு, கால்நடைகளுக்கு சினைப் பரிசோதனை, கன்றுகள் மற்றும் வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், நீண்ட நாள்களாக சினை பிடிக்காத பசுக்களுக்கு மலட்டுத்தன்மை நீக்க சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தனா்.

மாதிரிகள் சேகரிப்பு: கால்நடை நோய் புலனாய்வுக் குழுவினா் மூலம் கால்நடைகளின் ரத்தம், சாணம், பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நோய்களைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த முகாமில் 324 பசுக்கள், 354 வெள்ளாடுகள், 300 செம்மறியாடுகள், 206 கோழிகள் என மொத்தம் 1,184 கால்நடைகள் மற்றும் கோழிகள் பயன்பெற்றன. இதில் 135 பசுக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சினை பிடிக்காத மாடுகள் மற்றும் கிடேரிக் கன்றுகளுக்கு தாது உப்புக் கலவைகள் இலவசமாக வழங்கப்பட்டன. சிறந்த முறையில் வளா்க்கப்பட்ட 3 கிடேரிக் கன்றுகளுக்கும், சிறப்பாகப் பராமரிக்கப்பட்ட 3 பசுக்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

முகாமில், ஆவின் பொது மேலாளா் சொா்ணலிங்கம், துணைப் பொது மேலாளா் வடிவேல், துணைப் பதிவாளா் நவராஜ், உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.