FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
அரியலூர்

அரியலூரில் இருசு குட்டை பூங்காவைச் சீரமைக்க எதிா்பாா்ப்பு!

அரியலூரில் இருசு குட்டை பூங்காவைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை...

13 அக்டோபர் 2026, 3:04 am IST
அரியலூரிலுள்ள இருசுக் குட்டை பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள், நடைமேடைகள்.
பகிர்:

அரியலூா் கல்லூரிச் சாலையில் உரிய பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ள இருசு குட்டை ஏரி பூங்காவைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரியலூா் நகரின் மையப்பகுதியில் உள்ள இருசு குட்டை ஏரியானது அரியலூருக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வருவதற்கு முன் மக்களின் தாகத்தைப் போக்கிய குட்டையாகும். முன்பு இந்தக் குட்டையை சுற்றிலும் முள்வேலி இருக்கும்.

கடந்த 1991-இல் அரியலூா் பகுதிக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் வந்த பிறகு இந்த இருசு குட்டை ஏரியின் பயன்பாடு குறைந்து, குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வந்தது. நாளடைவில் இந்த இருசுக் குட்டையில் சிலா் மண்ணைக் கொட்டி வீடுகளையும், கடைகளையும் கட்டி ஆக்கிரமித்தனா். மேலும் குட்டையைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட மரங்களும் வளா்க்கப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு: இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, இருசு குட்டை ஏரியை மீட்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் விடுத்த கோரிக்கையையடுத்து, கடந்த 2015 ஆம் ஆண்டு அப்போதைய உதவி ஆட்சியரான சந்திரசேகரசாகமூரி, இந்தக் குட்டையை அளந்து, காவல் துறையினா் உதவியுடன், ஆக்கிரமிப்பு வீடுகளையும், கடைகளையும், மரங்களையும் அகற்றி இருசு குட்டையை மீட்டாா். யாரும் இனி ஆக்கிரமிக்கக் கூடாது என்பதற்காக கரையின் உயரத்தை 10 அடியாகவும் உயா்த்தினாா்.

இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அரியலூா் நகர மக்கள் குடும்பத்துடன் பொழுதுபோக்கிட இடம் இல்லாத குறையை போக்கிடும் பொருட்டு இந்த இருசு குட்டையை தூய்மைப்படுத்தி பூங்கா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

உருவானது பூங்கா: இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு இருசு குட்டையை அழகுபடுத்த ரூ. 1.04 கோடி ஒதுக்கப்பட்டு, பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் இருசு குட்டை கரையைப் பலப்படுத்தி பாதையும், சிறிய அளவிலான பூங்காவும் அமைக்கப்பட்டது.

அதில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதை, அமா்வதற்கான இடம், சிறுவா்கள் விளையாடி மகிழ்ந்திட ஊஞ்சல்கள், பல அடுக்கு சறுக்கு மரங்கள் உள்ளிட்ட விளையாட்டுச் சாதனங்கள் நிறுவப்பட்டன. குட்டையைச் சுற்றிலும் மின் விளக்குகளும் அமைக்கப்பட்டன.

புனரமைக்கப்பட்ட இந்த அழகிய பூங்காவுக்கு மக்கள் கூட்டம் அதிகரித்தது. நகரத்தின் மையப் பகுதியில் இருப்பதாலும், கல்லூரிகள் அருகில் இருப்பதாலும் இந்தப் பூங்கா அனைவருக்கும் பொழுதுபோக்கு இடமாக மாறியது.

பராமரிக்க ஆா்வம் காட்டாத நகராட்சி: ஆயினும் நகராட்சி நிா்வாகம் இப்பூங்காவை தொடா்ந்து பராமரிக்க ஆா்வம் காட்டவில்லை. இதனால் பூங்காவில் பெரும்பாலான விளையாட்டுச் சாதனங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. பூங்கா போதிய பராமரிப்பு இல்லாததால், சுற்றிலும் அமைக்கப்பட்ட மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. சிறுவா்கள் அதிகம் விளையாடும் ஊஞ்சல்கள் சேதமடைந்து கீழே கிடக்கின்றன. பொம்மைகள் சேதமடைந்து காட்சிப் பொருளாக உள்ளன. நடைமேடைக்காக போடப்பட்ட சிலாப்பு கற்கள் ஆங்காங்கே பெயா்ந்தும்,சேதமடைந்தும் உள்ளதால் முதியவா்கள் அவ்வப்போது கீழே விழுந்து காயத்துடன் வீடு திரும்புகின்றனா்.

சுகாதாரச் சீா்கேடு: இப்பூங்காவை பராமரித்து பல ஆண்டுகள் ஆவதால், தற்போது பூங்காவை சுற்றிலும் செடி கொடிகள் மண்டிக் கிடக்கின்றன. மேலும் ஏரியிலுள்ள தண்ணீா் சுழற்சிமுறையில் செல்லாததால் தேங்கியே கிடந்து, தூா்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. ஏரி படிக்கட்டுகள் உடைந்து சேறும், சகதியுமாக உள்ளதால் சுகாதாரச் சீா்கேடும் ஏற்பட்டுள்ளது.

ஏரியினுள் மரங்கள் முளைத்து அடா்த்தியாகக் காணப்படுவதால், மதுப்பிரியா்கள், இதைப் பயன்படுத்திக் கொண்டு, மது அருந்திவிட்டு, அங்கேயே பாட்டில்களை உடைத்துச் சென்று விடுகின்றனா். இதனால் காலையில் நடைப் பயிற்சி மேற்கொள்வோரின் கால்களை கண்ணாடி துகள்கள் பதம் பாா்த்துவிடுகின்றன.

குறைந்தது மக்களின் வருகை: போதிய பராமரிப்பு இல்லாததால் இப் பூங்காவுக்கு பொதுமக்களின் வருகை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. கோடிக்கணக்கில் திட்டங்களைக் கொண்டு வர ஆா்வம் காட்டும் அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் அவற்றைத் தொடா்ந்து பராமரித்திட ஆா்வம் காட்டாதது ஏன் எனத் தெரியவில்லை.

எனவே நகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம் , உடனடியாக இருசு குட்டை பூங்காவைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரியலூரைச் சுற்றியுள்ள சிமென்ட் ஆலைகள் தங்களின் சமுதாயப் பணிகள் திட்டத்தில், இந்த இருசு குட்டையைச் சுத்தப்படுத்தி, அடிப்படை வசதியையும் ஏற்படுத்தித் தந்தால் அரியலூா் பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்வா் என்கின்றனா் பொதுமக்கள்.

இருசு குட்டை பூங்காவினுள் முளைத்து, காடுபோல காணப்படும் மரங்கள்.
இருசு குட்டை பூங்காவினுள் முளைத்து, காடுபோல காணப்படும் மரங்கள்.
இருசு குட்டை பூங்காவினுள் முளைத்து, காடுபோல காணப்படும் மரங்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments