தொழில்முனைவோரை உருவாக்க கரூர் உள்பட 10 இடங்கள் தேர்வு: கயிறு வாரிய மண்டல மேலாளர்
தமிழகத்தில் கயிறு சார்ந்த தொழில்முனைவோரை உருவாக்க கரூர் உள்பட 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி கயிறு வாரிய மண்டல மேலாளர் பூபாலன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கயிறு சார்ந்த தொழில்முனைவோரை உருவாக்க கரூர் உள்பட 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி கயிறு வாரிய மண்டல மேலாளர் பூபாலன் தெரிவித்தார்.
கரூரில் இந்திய அரசின் பொள்ளாச்சி கயிறு வாரிய மண்டல அலுவலகம், கரூர் மாவட்ட தொழில் மையம் மற்றும் கரூர் கயிறு தொழில் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை நடைபெற்ற தேங்காய் நார் தொழில் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் அவர் பேசியது: ஒருகாலத்தில் வேண்டாத பொருளாக இருந்த தென்னை நார் மற்றும் அதன் கழிவுப்பொருள்களில் இருந்து இன்று காயர் மேட், காயர் பித், ஜியோ பேக், காயர் பிளே என்று சுமார் 103 மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உருவாக்கப்படுகின்றன.
தமிழகத்தில் இருந்து மூலப்பொருட்களை வாங்கும் கேரள மாநிலம் அதை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக உருவாக்கி சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. தமிழகத்தில் கயிறு சார்ந்த தொழில் முனைவோரை உருவாக்க கரூர் உள்பட 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதற்காக 33 திட்டங்களை கயிறு வாரியம் தயாரித்துள்ளது. அதை பொதுமக்களிடத்தில் கொண்டு சென்று புதிய தொழில் முனைவோரையும், ஏற்றுமதியாளரை உருவாக்கவும் தயாராக உள்ளது என்றார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். கயிறு தொழில் முனைவோர்கள் தங்கராஜ், பாஸ்கரன் பழனிசாமி, கரூர் கைத்தறி ஏற்றுமதி துணி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் அன்பொளி காளியப்பன், கரூர் ஒன்றிய அதிமுக செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கயிறு வாரிய உறுப்பினர் காந்தி கயிறு தொழிலின் தற்போதைய வளர்ச்சி குறித்து பேசினார். தொடர்ந்து சுரேஷ் குமார் கயிறு வாரியத்தின் திட்டம் மற்றும் சேவை குறித்து பேசினார். பெரியசாமி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.