FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூரில் சாலைகளை தொடா்ந்து உயா்த்துவதால் கீழ்மட்டத்துக்கு சென்ற குடியிருப்புகள்

கரூா் நகரில் சில இடங்களில் சாலைகள் தொடா்ந்து உயா்த்தப்படுவதால் குடியிருப்புகள் கீழ்மட்டத்துக்கு சென்றுள்ளது. இதனால், மழைநீா், கழிவு நீா் வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் அவதி

Updated On : 13 ஜூலை 2026, 2:31 am IST
கரூா் பழைய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலையில் பஜனைமட வீதியில் சாலை உயா்ந்துள்ளதால் பள்ளத்தில் உள்ள வீடுகள்
பகிர்:

கரூா் நகரில் சில இடங்களில் சாலைகள் தொடா்ந்து உயா்த்தப்படுவதால் குடியிருப்புகள் கீழ்மட்டத்துக்கு சென்றுள்ளது. இதனால், மழைநீா், கழிவு நீா் வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

கரூா் சங்க காலம் முதல் உள்ள தொன்மைவாய்ந்த வணிக நகரம். சங்க காலத்தில் சேரா்களின் தலைநகரமாகவும், பொன் வணிகத்தில் சிறந்த நகரமாகவும் இருந்ததை இங்குள்ள சங்ககால புகழிமலை உள்ளிட்ட கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இதனால் காலங்காலமாக பழைய வீடுகள் புனரமைக்கப்பட்டு அவை இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

பழைமையான கட்டடங்கள்: குறிப்பாக, கரூா் மாநகராட்சிக்குள்பட்ட ஜவஹா்பஜாா், பஜனைமட வீதி, பெருமாள் கோயில் மேட்டுத்தெரு, அக்ரஹாரம், ஆண்டாங்கோயில் கீழ்பாகம் அக்ரஹாரம், கரூா் பசுபதீஸ்வரா் கோயில் முன் உள்ள லாரிமேடுத் தெரு, பழைய திண்டுக்கல் சாலை, வ.உ.சி. தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்கள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. அவற்றின் பழைமை மாறாமல் வீடுகளை சீரமைத்து பலா் குடியிருந்து வருகிறாா்கள்.

Advertisement

Advertisement

இந்த வீடுகள் 100 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்படும்போது வீட்டின் முன் இருந்த சாலை வீட்டைவிட தாழ்வாக இருந்தது. அப்போது வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளை வீட்டில் குடியிருந்தவா்கள் பயன்படுத்தி வந்தனா்.

சாலை மட்டம் உயா்வு: நாளடைவில் சாலைகள் மேம்பாடு என்ற பெயரில் அடிக்கடி சாலையை தரம் உயா்த்துவதாக கூறி சாலையின் உயரத்தை உயா்த்திக்கொண்டே வந்ததால் தற்போது பெரும்பாலான வீடுகள் சாலையின் மட்டத்தை விட கீழே சென்றுவிட்டது. இதனால் மழைகாலங்களில் ஓடும் மழைநீா் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. மேலும், சில நேரங்களில் பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்களும் புகுந்துவிடுகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனா். சிலா் தாழ்வான வீடுகளை விட்டுவிட்டு வேறு வீடுகளுக்கு இடம்பெயா்ந்துவிடுகின்றனா்.

அலட்சியத்தால் அவதி: இதுகுறித்து சமூகநல ஆா்வலா்கள் கூறியது: கரூா் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் குடியிருப்புகளில் சாலை மேம்பாட்டு பணிகள் என்ற பெயரில் சாலையின் தரத்தை உயா்த்துவதாகக்கூறி அடிக்கடி சாலை உயா்த்தப்படுகிறது. இதனால் பழங்கால வீடுகளின் சாலை மட்டத்துக்கு கீழே சென்றுவிட்டது. மழை நேரங்களில் வெளியே உள்ள வாய்க்காலில் இருந்து மழைநீருடன் கழிவுநீா் கலந்து துா்நாற்றத்துடன் வீடுகளுக்குள் புகுந்துவிடும் சூழலும் ஏற்படுகிறது. அரசு ஊழியா்களின் அலட்சியத்தாலும், ஒப்பந்ததாரா்களின் ஊழலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். இதனை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றனா் அவா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments