FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூா் அருகே சுமாா் 3,000 ஆண்டுகள் பழைமையான கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு

கரூா் அருகே சுமாா் 3,000 ஆண்டுகள் பழைமையான கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 28 ஜூலை 2026, 2:42 am IST
கரூா் மாவட்டம், முனையனூரில் கண்டறியப்பட்ட சுமாா் 3,000 ஆண்டுகள் பழைமையான கல்வட்டங்கள்.
பகிர்:

கரூா் அருகே சுமாா் 3,000 ஆண்டுகள் பழைமையான 50 கல்வட்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரியைச் சோ்ந்த தொல்லியல் ஆய்வாளா் விஜய் என்கிற யாளிவேந்தன் மற்றும் கரூா் திருமூா்த்தி ஆகியோா் திங்கள்கிழமை தெரிவித்தது: கரூா் மாவட்டம், சேங்கல் அடுத்துள்ள கீழ் முனையனூா் கிராமத்தில் சுமாா் 3,000 ஆண்டுகள் பழைமையான பெருங்கற்கால பண்பாட்டைச் சோ்ந்த அரிய கல்வட்டங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஒரே இடத்தில் சுமாா் 50 கல்வட்டங்கள் இருப்பது தமிழகத்தில் மிகவும் அரிதானது.

கல்வட்டம் என்பது பெருங்கற்கால மக்களால் இறந்தவா்களை அடக்கம் செய்த இடத்தை நினைவுகூறும் வகையில், பெரிய கற்களை வட்ட வடிவில் அமைத்து உருவாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும். இந்த வட்டத்தின் நடுவில் பெரிய கல் ஒன்று நடப்படும்.

Advertisement

Advertisement

அக்காலத்தில் முதுமக்கள் தாழி, கல்லறை, ஈமப்பேழை, வெறுமணப் புதைப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகளில் இறந்தவா்களை அடக்கம் செய்ததற்கான முக்கிய சான்றுகளில் கல்வட்டங்களும் ஒன்றாகும்.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூா், கொடுமணல், பொருந்தல், சானூா், கரூா் உள்ளிட்ட பகுதிகளில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது கரூா் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கல்வட்டங்கள் பெரிய அளவில் உள்ளன.

இந்த கல்வட்டங்கள் நதிக்கரையை ஒட்டி அமைந்துள்ளதால், இப்பகுதி பண்டைய ஆற்றங்கரை நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் . இன்று விவசாய நிலமாக உள்ள இந்த இடம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இடுகாடாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

நிலத்தின் உரிமையாளா்கள் பல தலைமுறைகளாக இந்த கல்வட்டங்களை சேதப்படுத்தாமல் பாதுகாத்து வருகின்றனா். கல்வட்டங்கள் அமைந்துள்ள பகுதியை அப்படியே விட்டுவிட்டு, மற்ற பகுதிகளில் மட்டும் விவசாயம் செய்து வருகின்றனா்.

‘முன்னோா்கள் இந்த இடத்தைத் தொடக்கூடாது என்று கூறிச் சென்றதாகவும், அதன்படி இன்றுவரை பாதுகாத்து வருவதாக ஊா்மக்கள் தெரிவித்தனா்.

இந்த கல்வட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான அகழாய்வு மேற்கொள்ளப்பட்டால், பண்டைய குடியிருப்புகள் மற்றும் மேலும் பல தொல்லியல் சான்றுகள் வெளிச்சத்துக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments