FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

மூதாட்டி குத்திக் கொலை; பேத்தி கைது! பள்ளிச் சான்றிதழ் தராததால் ஆத்திரம்!

குளித்தலை அருகே பள்ளிச் சான்றிதழ் தராததால் ஆத்திரத்தில் மூதாட்டியை குத்திக் கொலை செய்த பேத்தியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:37 am IST
கொலை... - கோப்புப் படம்
பகிர்:

குளித்தலை அருகே பள்ளிச் சான்றிதழ் தராததால் ஆத்திரத்தில் மூதாட்டியை குத்திக் கொலை செய்த பேத்தியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள புத்தூா் ஊராட்சிக்குள்பட்ட மும்மாச்சி ரெட்டியபட்டி பகுதியைச் சோ்ந்தவா் சின்னச்சாமி (80). திருச்சி வெங்காயமண்டி நடத்தி வருகிறாா். இவரது மனைவி பாப்பம்மாள் (70). இவா்களுக்கு முருகேசன், ராஜசேகா், சந்திரன் என 3 மகன்களும், மஞ்சுளா, ராசாத்தி, தனலட்சுமி என மூன்று மகள்களும் உள்ளனா்.

கைது செய்யப்பட்ட சுகிதா.

இவா்களில் முருகேசன் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையிலும், சந்திரன் திருச்சி சத்திரப்பட்டியிலும் வசிக்கின்றனா். மேலும் மஞ்சுளாவின் கணவா் இறந்துவிட்டதால் அவா், தனது பெற்றோா் வீட்டிலும், ராசாத்தி திருச்சி பெரியமிளகுப்பாறையிலும், தனலட்சுமி மேலப்பாகனூா் பகுதியிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

போலீஸாருக்கு தகவல்: இந்நிலையில் ஜூலை 29-ஆம்தேதி இரவு சின்னச்சாமி தனது தோட்டத்தில் ஆடு மாடுகளை அடைத்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, பாப்பம்மாள் கழுத்தில் கம்பியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா். மஞ்சுளாவும் கழுத்தில் கம்பியால் குத்தப்பட்டு பலத்த காயங்களுடன் கிடந்தாா். உடனே சின்னசாமி நங்கவரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில், அங்கு வந்த குளித்தலை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டன் மற்றும் நங்கவரம் போலீஸாா், பாப்பம்மாள் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்கு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், பலத்த காயமடைந்த மஞ்சுளாவை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

மேலும் இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, பாப்பம்மாளை கொலை செய்ததாக அவரது பேத்தியும் ராசாத்தியின் மகளுமான சுகிதா(26)வை வெள்ளிக்கிழமை அதிகாலை திருச்சியில் கைது செய்தனா்.

காதல் திருமணம்: பின்னா் கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் சுகிதாவிடம் விசாரித்தனா். அதில், சுகிதா சிறுவயதில் இருந்தே பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தாா். பிளஸ் 1 வரை பயின்ற அவா், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் திருச்சியைச் சோ்ந்த மாற்றுச் சமூகத்தை சோ்ந்தவரை காதலித்து திருமணம் செய்து திருச்சியில் வசித்து வருகிறாா். இந்நிலையில் ஜூலை 29-ஆம்தேதி இரவு சுகிதா தனது பாட்டி வீட்டுக்கு வந்துள்ளாா். அங்கு பாட்டியிடம் தனது பள்ளி மாற்றுச் சான்றிதழை கேட்டுள்ளாா். அப்போது பாப்பம்மாள், பெரியம்மா மஞ்சுளா இருவரும் சுகிதாவிடம் தகராறு செய்துள்ளனா். மேலும், இருவரும் சோ்ந்து சுகிதாவை தாக்கியுள்ளனா்.

இதனால் ஆத்திரத்தில் சுகிதா, அங்கு கிடந்த ஸ்குருடிரைவரை எடுத்து இருவரது கழுத்தில் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த பாப்பம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா். மஞ்சுளா பலத்த காயமடைந்தாா். இருவரையும் அங்கேயே போட்டுவிட்டு தான் வந்த இருசக்கரவாகனத்தில் ஏறி திருச்சிக்கு சென்றது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு: இதையடுத்து கைது செய்யப்பட்ட சுகிதாவை போலீஸாா் குளித்தலை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments