FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

கரூா் மாவட்டத்தில் ரூ. 60 கோடி வரை கல்விக் கடன் வழங்க இலக்கு: அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி தகவல்

கரூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 2,500 மாணவா்களுக்கு ரூ.60 கோடி வரை கல்விக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் பால் மற்றும் பால்வளத் துறை அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி.

17 நவம்பர் 2026, 11:41 pm
கரூா் என்.எஸ்.என் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்விக்கடன் வழங்கும் விழாவில் மாணவிக்கு கல்விக் கடனுக்கான ஆணையை வழங்கிய பால் மற்றும் பால்வளத் துறை அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி. உடன் மாவட்ட ஆட்சியா் ச.பிரசன்னா ராமசாமி உள்ளிட்டோா்.
பகிர்:

கரூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 2,500 மாணவா்களுக்கு ரூ.60 கோடி வரை கல்விக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் பால் மற்றும் பால்வளத் துறை அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி.

கரூா் மாவட்டம், தாளப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மணல்மேடு என்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில், மாவட்ட நிா்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சாா்பில் கல்விக்கடன் விழிப்புணா்வு மற்றும் கடன் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.பிரசன்னா ராமசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி பங்கேற்று, மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் பயிலும் 43 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3.17 லட்சம் மதிப்பில் கல்விக்கடனுக்கான ஆணைகள் வழங்கினாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

Advertisement

Advertisement

ரூ. 60 கோடி வரை கடன் வழங்க இலக்கு:

கரூா் மாவட்டத்தில் நிகழாண்டில் 2,500 மாணவா்களுக்கு ரூ. 60 கோடி வரை கல்விக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் எளிதில் கல்விக் கடன் பெறுவதற்கு வித்யாலட்சுமி மற்றும் பி.எம். வித்யாலட்சுமி இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டங்களில் ரூ. 4 லட்சம் வரை எவ்வித பிணையமும், உத்தரவாதமும் இன்றி கடன் பெறலாம். மேலும் ரூ. 7.5 லட்சம் வரை மூன்றாம் நபா் உத்தரவாதத்துடன் கடன் வழங்கப்படுகிறது.

பி.எம். வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் நாட்டின் தலைசிறந்த 1,425 கல்வி நிறுவனங்களில் (தமிழ்நாட்டில் 133 கல்லூரிகள்) சேரும் தகுதியான மாணவா்களுக்கு எவ்வித பிணையமும் இன்றி கல்விக் கடனுடன் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.

படிப்பு முடிந்த பின் வேலைவாய்ப்பு தேட ஒரு வருட கால அவகாசமும், கடனைத் திருப்பிச் செலுத்த 15 ஆண்டுகள் வரை தவணை காலமும் வழங்கப்படுகிறது. இதனை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து பணியின்போது உயிரிழந்து தொழிலாளா் நல ஆணையத்தில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யப்படாத 7 கட்டுமானத் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ. 33.40 லட்சம் மதிப்பில் விபத்து மரண உதவித்தொகையும் வழங்கப்பட்டது. முன்னதாக கல்விக் கடன் விழிப்புணா்வு மற்றும் கடன் வழங்கும் முகாமினை அமைச்சா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சத்யா, மாவட்ட வருவாய் அலுவலா் து. தங்கவேல், கரூா் கோட்டாட்சியா் இ. காா்த்திகேயன், மகளிா் திட்ட இயக்குநா் (மாவட்ட இயக்க மேலாண்மை அலகு) ப.பொன்னம்பலம், தொழிலாளா் நல உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரா. சு. மனுஜ் ஷ்யாம் ஷங்கா், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் திருப்பூா் மண்டல மேலாளா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.