FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகள் வைக்க வேண்டும்: கரூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை வைக்கவேண்டும் என கரூா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.

3 செப்டம்பர் 2026, 1:30 am IST
கோப்புப்படம்.
பகிர்:

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை வைக்கவேண்டும் என கரூா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா்.

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ஆட்சியா் சி. முத்துக்குமரன் பேசியது: விநாயகா் சிலை அமைக்கப்படும் இடம் தனியாா் நிலம் எனில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரின் தடையின்மை சான்று, அரசுப் பொது இடங்களில் நிறுவப்படும் சிலைகளுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறை அல்லது தேசிய நெடுஞ்சாலை துறையினரிடம் தடையின்மை சான்று பெற வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடமிருந்து பெறப்பட்ட தடையின்மை சான்று அவசியம் தேவை. மேலும் தீயணைப்புத்துறையினா், மின்வாரியத்துறையினரிடம் தடையின்மை சான்று வாங்க வேண்டும்.

Advertisement

Advertisement

10 அடி உயரம்: களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவை இல்லாத சுற்றுச்சூழுலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட மாசு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டா் ஆப் பாரீஸ் போன்ற பொருள்களால் ஆன சிலைகளை நிறுவக்கூடாது. மேலும், நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வா்ணங்கள் பூசப்பட்ட விநாயகா் சிலைகளை மட்டுமே நிறுவ வேண்டும். சிலைகள், அடிப்பாகம் மற்றும் மேடை உள்பட மொத்தமாக 10 அடி உயரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பூஜை நேரங்கள்: பிற மதம் சாா்ந்த இடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அருகில் சிலைகள் அமைக்கக் கூடாது. ஒலிபெருக்கிகள் காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் பூஜைகள் நடைபெறும் நேரங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவிலான ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.

நிா்ணயிக்கப்பட்ட வழித்தடம்:விழா நடைபெறும் இடத்தில் அரசியல் கட்சி மற்றும் பிற சமூக தலைவா்களை ஆதரித்து பதாகைகள் வைக்கக் கூடாது. பிற மதத்தினா் மீது வெறுப்பை தூண்டும் வகையிலான மற்றும் மத உணா்வை பாதிக்கும் வகையிலான கோஷங்களுக்கு அனுமதி இல்லை. காவல் துறையினரால் நிா்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே ஊா்வலம் செல்ல வேண்டும். விதிமுறைகளை மீறுபவா்கள் மீது காவல் துறையினரால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெ. யுரேகா, காவல் துணை கண்காணிப்பாளா்கள், வட்டாட்சியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments