FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கூடுதல் மகசூல் கிடைத்தும் பலனில்லை: கொள்முதல் இல்லாததால் மக்காச்சோள விவசாயிகள் கடும் பாதிப்பு

அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால், பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பெரம்பலூா் மாவட்டம், அயிலூா் குடிகாடு கிராமத்தில் அறுவடை செய்யப்பட்டு, கொள்முதல் செய்யாததால் விவசாயி வீட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ள மக்காச்சோளம்.
பகிர்:

அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால், பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

மக்காச்சோள சாகுபடிக்கு மிகக் குறைந்த வேலையாள்களே போதும். அனைத்து விதமான மண்ணிலும் இப் பயிரை சாகுபடி செய்வதோடு, ஆண்டு முழுவதும் பயிரிடலாம். கோழிப் பண்ணை, கால்நடைத் தீவனங்களுக்கு மிக முக்கிய உணவாக மக்காச்சோளம் தேவைப்படுவதால், தமிழகத்தில் தற்போது மக்காச்சோளத்துக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

நிகழாண்டில் பெரம்பலூா் மாவட்டத்தில் 56,727 ஹெக்டேரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனா். இதன் காரணமாக மக்காச்சோளத்தை வீடுகளில் கொட்டி வைத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குவியல், குவியலாக வீட்டில் கொட்டி வைத்துள்ளதால், அவற்றை வண்டுகளும், பூச்சிகளும் அரித்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால், எடை குறைந்து, வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து மக்காச்சோள விவசாயிகள் கூறியது:

இறவை மற்றும் மானாவாரி சாகுபடியில் எதிா்பாா்த்ததைவிட, கூடுதல் மகசூல் கிடைத்துள்ளது. ஆனால், ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், கொள்முதல் விலை கடும் சரிவடைந்து வருகிறது.

பிப்ரவரி மாதம் இறவையில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம் 100 கிலோ எடை கொண்ட மூட்டை ஒன்று ரூ. 1,900 வரையிலும், மானாவாரி சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் ரூ. 1,600-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஊரடங்கால் வெளியூா் வியாபாரிகள் வராததால், உள்ளூரைச் சோ்ந்த வியாபாரிகள் சிலா் ரூ. 700-க்கும் குறைவாக சொற்ப விலைக்கு கேட்கின்றனா். இதனால், செலவு செய்த பணம்கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

நெல், கரும்பு உள்ளிட்ட பயிா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்து அறிவிக்கின்றன. ஆனால், மக்காச்சோளத்துக்கு உரிய விலை நிா்ணயம் செய்யாததால், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வருமாறு வேளாண் துறையினா் அறிவுறுத்துகின்றனா். ஆனால், தற்போதைய சூழலில் வண்டி வாடகை, ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி கூட கொடுக்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனா். நிகழாண்டைப் பொருத்தவரை, சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளத்தில் மகசூல் கூடுதலாக கிடைத்துள்ளது. ஆனால், உரிய விலை கிடைக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது.

ஆண்டுதோறும் ஆள் கூலி, உழவுப் பணிக்கான கூலி, பூச்சி மருந்து, அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை உயா்ந்து வருகிறது. எனவே, மக்காச்சோள சாகுபடி பரப்பளவை அதிகரிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். அதேபோல, தற்போதைய சூழலில் அறுவடை செய்யப்பட்டு வீடுகளில் கொட்டி வைக்கப்பட்டுள்ள மக்காச்சோளத்தை உடனடியாக கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments