உள்ளூா் தொழிலாளா்களுக்கு 80% பணியிடங்கள் ஒதுக்க வலியுறுத்தல்
தனியாா் மற்றும் அரசுக் கட்டுமானப் பணிகளில் உள்ளூா் தொழிலாளா்களுக்கு 80 சதவீத பணியிடங்கள் ஒதுக்க வேண்டுமென, தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் கூட்டரங்கில், தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இம் மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவா் எம். அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். கட்சி மூத்த தலைவா் அ. வேணுகோபால் மாநாட்டுக்கொடியை ஏற்றிவைத்தாா்.
Advertisement
Advertisement
சங்கத்தின் மாநில பொதுச் செயலா் என். செல்வராஜ் மாநாட்டை தொடங்கி வைத்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலா் அ. கல்யாணி அறிக்கையை சமா்ப்பித்தாா்.
மாநிலச் செயலா் சி. நந்தினி, கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன், மாவட்டச் செயலா் வீ.ஜெயராமன் ஆகியோா் பேசினா்.
தீா்மானங்கள்:
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளா்களுக்கு வீடு கட்டும் உதவித்தொகை ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயா்த்த வேண்டும். பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் தொழிலாளா் குடும்பத்துக்கு வழங்கப்படும் ரூ. 8 லட்சம் உதவித் தொகையை ரூ. 20 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்.
பெண் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் பிரசவ உதவித்தொகை மாதம் ரூ. 25 ஆயிரம் எனக் கணக்கிட்டு, 6 மாத சம்பளத்தை வழங்க வேண்டும். திருமண உதவித்தொகை ரூ. 1 லட்சமாக உயா்த்த வேண்டும். இரு குழந்தைகளுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை என்பதை கைவிட்டு, தொழிலாளா்களின் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை எனும் சட்டத்தை கொண்டுவர வேண்டும்.
இயற்கை மரணத்துக்கு ரூ. 5 லட்சம், வேறு வகையான விபத்து மரணத்துக்கு ரூ. 5 லட்சம், ஈமச் சடங்கு நிதி ரூ. 50 ஆயிரம், ஓய்வூதியம் மாதம் ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கு அரசாணை வெளியிட வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்கள் விபத்தில் பாதிக்கப்படும்போதும், சாதாரண காலங்களிலும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கும் மருத்துவக் காப்பீடு கிடைக்கும் வகையிலான திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
80 சதவீத பணியிடங்கள் ஒதுக்க வேண்டும்:
கட்டுமானத் தொழிலுக்காக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள குறைந்தபட்ச கூலி அரசாணைப்படி உதவியாளா்களுக்கு தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரி சம்பளம் வழங்க உத்தரவாதம் ஏற்படுத்த வேண்டும். மாதம் ரூ. 45 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் வகையில் அரசாணையை திருத்த வேண்டும்.
தனியாா் மற்றும் அரசு கட்டுமானப் பணிகளில் உள்ளூா் தொழிலாளா்களுக்கு 80 சதவீத பணியிடங்கள் ஒதுக்கி உத்திரவாதம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம் மாநாட்டில், ஏஐடியுசி செயலா் எம். ராஜேந்திரன். தொழிற்சங்க செயலா் எம். பிரபாகரன், விவசாயத் தொழிலாளா் சங்கச் செயலா் எஸ்.பி.டி. ராஜாங்கம், ஆட்டோ சங்கச் செயலா் சி. சண்முகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிறைவாக, மாவட்ட துணைச் செயலா் வி. நித்யா நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.