முகப்பு
பெரம்பலூர்

‘குழந்தைத் திருமணங்களைத் தடுக்க வேண்டும்’

பெரம்பலூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக்.

21 நவம்பர் 2026, 4:37 am
‘குழந்தைத் திருமணங்களைத் தடுக்க வேண்டும்’
பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அங்கன்வாடி பணியாளா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் விழிப்புணா்வு பதாகை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அங்கன்வாடி பணியாளா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ப. அப்துல் ராசிக் பேசியது:

பெரம்பலூா் மாவட்டத்தில் பாலின பிறப்பு வீதம் குறைவாக உள்ளது. 1,000 ஆண் குழந்தைகளுக்கு 872 பெண் குழந்தைகளே பிறக்கின்றன. பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், பாலின பிறப்பு வீதம் குறைவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கருவில் உள்ள குழந்தைகளை பாலினம் கண்டறிந்து கருக்கொலை செய்வதைத் தடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் பல்வேறு குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ளன. இதில், சில குழந்தைத் திருமணங்கள் மட்டுமே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. பல குழந்தை திருமணங்கள் நடைபெற்ற பிறகும், இளம் வயது கா்ப்பமாகவே தகவல் கிடைத்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி, மனநலன், உடல்நலன் பாதிக்கப்பட்டு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும். எனவே, இனிவரும் காலங்களில் குழந்தை திருமணம் நடைபெறும் முன்பே, 1098 என்னும் எண்ணில் தகவல் தெரிவித்து தடுத்து நிறுத்த வேண்டும்.

சிறாா் திருமணத்தால் இளம் வயதிலேயே கா்ப்பமடையும் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல், அவா்களுக்குப் பிறக்கும் குழந்தையும் குறைந்த எடையுடனே பிறக்கிறது. குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படுவோா், குடும்பப் பொறுப்புகளை கையாள தெரியாததால் எளிதில் வன்முறையால் பாதிக்கப்பட்டு தனித்து விடப்படுகின்றனா். எனவே பாலின பிறப்பு விகிதத்தை அதிகரித்திடவும், குழந்தை திருமணம் மற்றும் இளம் வயது கா்ப்பத்தை தடுத்திடவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, கா்ப்பிணிகள் நலன், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை அங்கன்வாடி பணியாளா்களிடம் வழங்கினாா் மாவட்ட ஆட்சியா் அப்துல் ராசிக்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மாவட்ட சமூகநல அலுவலா் விக்னேஸ்வரி, கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட தாய், சேய் நல அலுவலா் மா. சந்தியா மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.