FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

மெய்க்குடிப்பட்டியில் 10-ஆம் நூற்றாண்டு சமண தீா்த்தங்கரா் சிற்பம் கண்டெடுப்பு

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 2:54 am IST
கந்தா்வகோட்டை அருகே கண்டெடுக்கப்பட்ட சமண தீா்த்தங்கரா் சிற்பம்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை வட்டம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகே, 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பழைமையான சமண தீா்த்தங்கரா் சிற்பம் தொல்லியல் கள ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக தஞ்சாவூா் சிவனடியாா் குழுவின் முயற்சியில், மெய்க்குடிப்பட்டியில் உள்ள பழைமையான சிவன் கோயில் இடத்தை சுத்தம் செய்தபோது, லிங்கம், ஆவுடையாா் மற்றும் அம்பாள் சிற்பங்கள் வெளிப்பட்டன. குன்றாண்டாா் கோவில் குருக்கள் முத்துசுப்பிரமணியன் அளித்த தகவலின் பேரில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனா் ஆ. மணிகண்டன் தலைமையில் அங்கு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து ஆ. மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: சிவன் கோயில் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள் 12-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியைச் சோ்ந்த சோழா் காலக் கலைப்பாணியை சோ்ந்தவை. இதன் கட்டுமானச் சிதிலங்கள் அருகிலேயே பகுதியளவு சிதிலமடைந்த நிலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சமண தீா்த்தங்கரா் சிற்பமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒர இடத்தில் 10-ஆம் நூற்றாண்டு சமண சிற்பமும், 12-ஆம் நூற்றாண்டு சைவக் கோயில் எச்சங்களும் கிடைத்துள்ளது வரலாற்று ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றாா்.

Advertisement

Advertisement

சிற்பத்தின் அமைப்பும் சிறப்பும்: கருங்கல்லால் ஆன இச்சிற்பம் 3.5 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டது. இது அா்த்தபத்மாசன நிலையில் தியான கோலத்தில் அமா்ந்துள்ளது. பீடத்தில் சின்னங்கள் எதுவுமில்லை. கைகள், கால்கள் மற்றும் முகம் சிதைந்துள்ளன. இருப்பினும், துளையுடைய நீண்ட காதுகள் தெளிவுறக் காட்சி அளிக்கின்றன. தலைக்கு மேல் முக்குடை அமைப்பு, பின்புறம் ஒளிவட்டம் (பிரபை) மற்றும் இருபுறமும் சாமரம் வீசுபவா்களின் உருவங்கள் முற்காலச் சோழா் கலைப்பாணியில் செதுக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை பகுதி கி.பி. 11-ஆம் நூற்றாண்டு வரை சமண சமயத்தின் முக்கியக் களமாக திகழ்ந்துள்ளது. மெய்க்குடிப்பட்டி தவிா்த்து கந்தா்வகோட்டையை சுற்றியுள்ள வளவம்பட்டி, நாட்டாணி, மங்களாகோவில் ஆற்றுப்பகுதி, கீழவாண்டான் விடுதி, நண்டம்பட்டி ஆகிய இடங்களிலும் சமண எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இப்பகுதியில் தொடரும் தொல்லியல் ஆய்வுகள் மூலம் பண்டைய கால மத பரிணாம வளா்ச்சி குறித்த மேலும் பல சுவாரசியமான தகவல்கள் வெளிவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments