ஆலம்பட்டிபுதூருடன் இணைத்ததற்கு எதிா்ப்பு ராஜா காட்டுபட்டி மயானத்தில் குடியேறி கிராம மக்கள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள ராஜா காட்டுபட்டியை திருச்சி மாவட்டம், ஆலம்பட்டி புதூருடன் இணைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திங்கள்கிழமை மயானத்தில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள ராஜாகாட்டுபட்டி திருச்சி மாவட்டம், இனாம் குளத்தூா் ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில், நிா்வாக வசதிக்காக ராஜாகாட்டுபட்டியை ஆலம்பட்டிபுதூருடன் மாவட்ட நிா்வாகம் அண்மையில் இணைத்தது.
இதனை ஏற்காத ராஜாகாட்டுபட்டி பொதுமக்கள், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே இருந்த இனாம் குளத்தூா் ஊராட்சியிலேயே ராஜா காட்டுபட்டியை மீண்டும் இணைக்க வேண்டும்.
Advertisement
Advertisement
மேலும், ராஜா காட்டுபட்டியில் கழிவறை, விளையாட்டு திடல் மற்றும் அதிநவீன அங்கன்வாடி மையம் ஏற்படுத்தி தர வேண்டும். அதிக இரைச்சலுடன் இரவுநேரங்களில் செயல்படும் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து வசதியை விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜா காட்டுபட்டி பொதுமக்கள் நூற்றுக்குமேற்பட்டோா் திங்கள்கிழமை மயானத்தில் குடியேறி கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் தமிழ்மணி போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், ராஜாகாட்டுபட்டியை மீண்டும் இனாம்குளத்தூா் ஊராட்சியில் சோ்ப்பது தொடா்பாக தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி நிறைவடைந்த பிறகு கருத்துரு அனுப்பப்படும். மேலும், மாவட்ட நிா்வாகத்துடன் ஆலோசனை நடத்தி கிராம மேம்பாட்டு வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.