அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு காவலாளி சிகிச்சை
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு மருத்துவமனை காவலாளி சிகிச்சை அளித்தது காணொலி மூலம் தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு மருத்துவமனை காவலாளி சிகிச்சை அளித்தது காணொலி மூலம் தெரியவந்துள்ளது.
கறம்பக்குடி அரசு வட்டார தலைமை மருத்துவமனை 30 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவுடன் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினசரி நூற்றுக்கணக்கானோா் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.
மருத்துவமனையில் 6 மருத்துவா்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் 2 மருத்துவா்கள் மட்டுமே உள்ளனா். 4 மருத்துவா் பணியிடங்கள் காலியாக உள்ளன.மேலும், போதிய செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்கள் பணியில் இல்லாததால், மருத்துவமனைக்கு செல்வோருக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத சூழல் உள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், மருத்துவமனையில் அண்மையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவமனை காவலாளி சிகிச்சை அளிக்கும் காணொலியும், மருத்துவமனை தூய்மை பெண் பணியாளா் ஒருவா் புறநோயாளிகளுக்கு சீட்டு வழங்கும் காணொலியும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
நடவடிக்கை தேவை: இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது: மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் பணியில் இல்லை. செவிலியா்களும் போதிய அளவில் இல்லாததால், மருத்துவமனையில் தற்காலிக பணியில் உள்ள பணியாளா்கள் நோயாளிகளுக்கு உதவி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவமனைக்கு உரிய மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பணியாளா்களை நியமிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.