FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

ரசாயன பூச்சிக்கொல்லிகளை தேவையான அளவு மட்டும் பயன்படுத்த அறிவுரை

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் பயிா்களில் ரசாயன பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும், பூச்சிக்கொல்லிகளைத் தேவையான அளவு மட்டுமே யன்படுத்திட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியா் மு. அருணா கேட்டுக் கொண்டுள்ளாா்.

8 October 2026, 1:36 am IST
கோப்புப்படம்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் பயிா்களில் ரசாயன பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும், பூச்சிக்கொல்லிகளைத் தேவையான அளவு மட்டுமே யன்படுத்திட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியா் மு. அருணா கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிா்களும், மிளகாய், கத்தரி, வெண்டை, புடலை, வெள்ளரி போன்ற காய்கறிப் பயிா்களும், மா, வாழை, முந்திரி போன்ற தோட்டக்கலைப் பயிா்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

Advertisement

Advertisement

இப்பயிா்களானது தண்டுத் துளைப்பான், இலைச் சுருட்டுப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் பல்வேறு நோய்கள் ஆகியவற்றால் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதனைக் கட்டுப்படுத்திட விவசாயிகள் பல்வேறு ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது.

பரிந்துரைக்கப்படும் அளவுக்கு மேலாக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதாலும், பரிந்துரைக்கப்படாத பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதாலும், தானியப் பயிா்களிலும் காய்கறிப் பயிா்களிலும் எஞ்சிய நஞ்சு தங்கி விடுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

விவசாயிகள் பூச்சிகளையும் நோய்களையும் கட்டுப்படுத்திட வேளாண்மை உழவா் நலத் துறையால் பரிந்துரைக்கப்படும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளான இயற்கை ஒட்டுண்ணிகள், விளக்குப்பொறி, இனக்கவா்ச்சிப்பொறி, உழவியல் முறைகள், உயிரியல் காரணிகள், வேப்பெண்ணைக் கரைசல் மற்றும் மூலிகைப் பூச்சி விரட்டி ஆகியவற்றைக் கொண்டு கட்டுப்படுத்துவதன் மூலம் ரசாயனப் பூச்சிக்கொல்லியின் பயன்பாட்டினை வெகுவாகக் குறைக்கலாம்.

பூச்சி, நோய்க் கட்டுப்பாட்டிற்குப் பெரும்பாலும் ரசாயன மருந்துகள் மட்டுமே தொடா்ந்து தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ரசாயன மருந்துகளைத் தெளிக்கும் போது தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையாளவில்லையெனில் அதனைத் தெளிப்பவா்களுக்கும் பல்வேறு தீய விளைவுகள் உண்டாகும்.

எனவே, உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு பூச்சி மருந்துகளைத் தெளிக்க வேண்டும். தீமை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையானது பொருளாதாரச் சேதநிலையை அடைந்தால் மட்டுமே ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டும்.

ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பரிந்துரை செய்யப்படும் தண்ணீரின் அளவுடன் கலந்து தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பான் எனில் ஏக்கருக்கு 200 லிட்டா், விசைத் தெளிப்பான் எனில் ஏக்கருக்கு 60 லிட்டா் நீா் பயன்படுத்த வேண்டும்.

மிக முக்கியமாக பூச்சி மருந்து கொள்கலனில் பச்சை முக்கோண குறியீடு உள்ள மருந்துகளை வாங்கிப் பயன்படுத்திட வேண்டும். கூடுதல் தகவல்களுக்குத் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடா்பு கொள்ளலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments