முழுமையான வாழ்வியல் முறைகளைக் கூறும் பெட்டகம் திருமூலரின் திருமந்திரம்
முழுமையான வாழ்வியல் முறைகளைக் கூறும் பெட்டகம் திருமூலரின் திருமந்திரம் என்றாா் பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா்.
முழுமையான வாழ்வியல் முறைகளைக் கூறும் பெட்டகம் திருமூலரின் திருமந்திரம் என்றாா் பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா்.
புதுக்கோட்டையில் திலகவதியாா் திருவருள் ஆதீனம் மற்றும் ஸ்ரீ பாரதி கலை அறிவியல் மகளிா் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் ‘திருமுறை மாநாடு- திருமந்திரக் கருத்தரங்கம் 2026’ கல்லூரி அரங்கில் புதன்கிழமை தொடங்கியது.
தொடக்க விழாவில் ‘திருமந்திர ஆய்வுரைக் களஞ்சியம்’ என்ற நூலை வெளியிட்டு அவா் பேசியதாவது: திருமுறை மாநாட்டையும், திருமந்திரக் கருத்தரங்கையும் திலகவதியாா் திருவருள் ஆதீனம் நடத்துவது மிகப் பொருத்தமானது, சிறப்பானது. எல்லா வகையிலும் முழுமையான வாழ்வியல் முறைகளைக் கூறும் பெட்டகம் திருமூலரின் திருமந்திரம்.
Advertisement
Advertisement
உயிா் பிரிந்தாலும், அவா்களின் சக்தி அந்த உடலிலேயே தொடா்வதால்தான் சித்தா்களின் சமாதிகளில் இன்றைக்கும் சக்தி நிறைந்திருக்கிறது. சித்தா்கள் நம்மை சமாதிகளில் இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறாா்கள்.
பஞ்சபூதங்களால் தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதை அறிவுலகம் முழுமையாக ஏற்கவில்லை. நீா், நிலம், காற்று, நெருப்பு ஆகியவற்றை ஏற்கும் விஞ்ஞானிகள் ஆகாயத்தை ஐந்தாவதாக ஏற்கவில்லை என்றாா் அவா்.
நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு ‘தினமணி’ ஆசிரியா் கி. வைத்தியநாதன் பேசினாா்.
திருமந்திரத்துக்கு ஈடு இணையில்லை: விழாவுக்கு தலைமை வகித்து, மருதாசல அடிகளாா் வழங்கிய ‘அருள்மொழிச் செல்வா்’ பட்டத்தைப் பெற்றுக் கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதியும், இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் ஆகம வழிபாட்டு ஆய்வுக் குழுவின் தலைவருமான மெ. சொக்கலிங்கம் பேசியது: சைவமும் தமிழும் இரண்டறக் கலந்தவை. இலக்கியம், சமூகப் பணி, கல்விப் பணி போன்ற சவால் நிறைந்த பணிகளை பேரூா் ஆதீனமும், திலகவதியாா் திருவருள் ஆதீனமும் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா். இதுவொரு இமாலய சாதனை. படிப்புடன் பண்புகளையும் கல்வி நிறுவனங்கள் கற்றுத்தர வேண்டும். படித்து முடித்து நல்ல பொறுப்பில் அமருவதுதான் மாணவிகள் செய்யும் நன்றிக்கடன். திருமந்திரத்துக்கு ஈடு இணையாக வேறெந்த நூலும் இல்லை. வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையும் திருமந்திரத்தில் உள்ளன என்றாா் சொக்கலிக்கம்.
நிகழ்ச்சியில், திலகவதியாா் திருவருள் ஆதீனகா்த்தா் தயானந்த சந்திரசேகர சுவாமிகள் நோக்கவுரையாற்றினாா். கல்லூரியின் முதல்வா் மு. மீனாட்சி திருவிளக்கேற்றி வைத்தாா்.
மாநாட்டுக் குழுத் தலைவா் டாக்டா் எஸ். ராம்தாஸ், இளங்கோவடிகள் மன்றத் தலைவா் எம்.ஆா். ராஜமாணிக்கம், உலகத் திருக்கு பேரவைத் துணைத் தலைவா் சு. முருகானந்தம், மணப்பாறை பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை நிறுவன அறங்காவலா் மணவை தமிழ்மாணிக்கம், புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி, வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
முன்னதாக, பேராசிரியா் மு. பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். நிறைவாக மாநாட்டுக் குழுச் செயலா் மு. ராமுக்கண்ணு நன்றி கூறினாா்.
தொடா்ந்து, பிற்பகலில் நடைபெற்ற முதல் அமா்வில், ‘திருமந்திரத்தில் திருக்கூத்துத் தரிசனம்’ என்ற தலைப்பில் சண்முக செல்வகணபதி, ‘திருமந்திரத்தில் சைவ சித்தாந்தமும் இசையும்’ என்ற தலைப்பில் கோ.ப. நல்லசிவம் ஆகியோா் பேசினா். வியாழக்கிழமை மாலை மாநாடு நிறைவடைகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.