FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு

வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி தஞ்சாவூரில் உள்ள 8 பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி தஞ்சாவூரில் உள்ள 8 பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா டிச. 8-ம் தேதி பகல் பத்து உத்ஸவத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இராப்பத்து வைபவத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதில், வெங்கடேச பெருமாள், தாயார் பரமபத வாசலைக் கடந்த பிறகு ஏராளமான பக்தர்கள் கடந்து சென்றனர்.
இதேபோல, மகர்நோன்புச்சாவடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. பெருமாள் பரமபத வாசலைக் கடந்து வசந்த மண்டபத்தை அடைந்தார். முன்னதாக, சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றது.
மேலும், வெண்ணாற்றங்கரையில் உள்ள மாமணி கோயில், தெற்கு வீதியில் உள்ள கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், கீழ வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் உள்பட 8 பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு விழா நடைபெற்றது.
கண்டியூர்: திருவையாறு அருகேயுள்ள கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  
கும்பகோணம்: கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு வெகு விரைவு தரிசன சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவர் சன்னதிகளில் கோமளவல்லி தாயார், ஆராவமுதன் பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர். பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் உச்சிப்பிள்ளையார் கோவில் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நந்திபுர விண்ணகரம் என்றழைக்கப்படும் நாதன்கோயில் ஜெகநாதபெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கும் வைபவம் நடைபெற்றது.
நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோயில், திருச்சேறை சாரநாதபெருமாள் கோயில், கும்பகோணம் சக்கரபாணி பெருமாள், ராமசுவாமி கோயில், பெரிய கடைத்தெரு தசாவதார பெருமாள், ராஜகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றிலும் வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பாபநாசம்: பாபநாசம் வட்டம், அம்மாபேட்டையில் கோயில் கொண்டு அருள் பாலித்துவரும் சீதாலெட்சுமி சமேத கோதண்டராம சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா நடைபெற்றது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட  பல்லக்கில் கோதண்டராமர், சீதா லெட்சுமி,லெட்சுமணர்,அனுமன் உள்ளிட்டோர் வீதி உலா நடைபெற்றது.  இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு கோயில் வளாகத்தில் பக்தர்கள் உபவாசமிருந்து, கண் விழித்து இறைவனை சேவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments