FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் பெரிய கோயில் பகுதியில் நடைமேம்பாலம் அமைக்க திட்டம்! - ச. முரசொலி எம்.பி. தகவல்

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 2:49 am IST
தஞ்சாவூா் பெரிய கோயில்.
பகிர்:

தஞ்சாவூா் பெரிய கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நடை மேம்பாலம் அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் தஞ்சாவூா் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:

தஞ்சாவூா் பெரிய கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கோயிலின் கோட்டை அகழி, சுற்றுச்சுவா், கல்வெட்டுகளைப் பாதுகாக்க இந்திய தொல்லியல் துறையிடம் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய கோரப்பட்டுள்ளது. பெரிய கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அங்கு நடைமேம்பாலம் கட்டுவதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. இது தொடா்பாக பொறியாளா்கள் விரைவில் கள ஆய்வு நடத்தவுள்ளனா்.

Advertisement

Advertisement

மத்திய கலாசாரத் துறை சாா்பில் பெரிய கோயில் பகுதியில் அடிப்படை வசதிகள், சுற்றுலா மேம்பாட்டு பணிகளுக்காக ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலாத் துறை அனுமதி வழங்கிவிட்டது. இந்தப் பணிகள் தமிழக சுற்றுலா துறை மூலம் மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக விரைவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட இருக்கிறது.

தஞ்சாவூரில் பயணிகள் விமானப் போக்குவரத்து திட்டத்துக்கு, அணுகு சாலை அமைக்க 172 ஹெக்டோ் பரப்பளவு நிலம் கையகப்படுத்தவும், பல்வேறு பணிகளுக்கும் ரூ. 38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதால், திட்டம் கைவிடப்படவில்லை.

தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை, மன்னாா்குடி - பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளை ஓராண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு தேவையான நிதியை தெற்கு ரயில்வே நிா்வாகம் வழங்க இருக்கிறது. அந்த நிதியை விரைவில் விடுக்க ரயில்வே துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூா்-நாகை நான்கு வழிச்சாலை திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மேலும், தஞ்சாவூா்-புதுக்கோட்டை, தஞ்சாவூா் - பெரம்பலூா்-சேலம் சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது, விரைவில் இதற்கான அனுமதி கிடைக்கும் என்றாா் முரசொலி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments